உயரம் குறைந்தவர்கள் தங்களின் உயரத்தை அதிகரிக்க மருத்துவத்தில் இருக்கும் சிகிச்சை முறை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு:
“என்ன டா இவ்ளோ குள்ளமா இருக்க? எதயாச்சு புடிச்சு தொங்கு அப்போதான் நல்ல வளர்ச்சி இருக்கும்” இந்த அறிவுரையை கடந்து வராமல் நமது குழந்தைப் பருவம் முழுமை அடையாது. இதனால்தான் என்னவோ சிலருக்கு தங்களைவிட உயரமாக இருப்பவர்களை பார்க்கும்போது பொறாமையோ, தாழ்வு மனப்பான்மையோ ஏற்படக்கூடும். இதற்கு மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா!!
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1950களில், Gavriil Ilizarov என்ற ரஷ்ய மருத்துவர் உயிரியல் மற்றும் உயிரியக்கவியலை இணைத்து ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தினார். அந்த கண்டுபிடிப்புடன் புதுமையான அறுவை சிகிச்சை நுட்பம் இணைந்து, தற்போது மூட்டு நீள அறுவை சிகிச்சை முறையாக வழக்கத்திற்கு வந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் செய்யப்படும் இந்த சிகிச்சை முறை இந்தியாவிலும் நடைமுறையில் உள்ளது. இந்த சிகிச்சைக்கு 75000 – 1,50,000 அமெரிக்கன் டாலர் செலவாகிறது. அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் உள்ள பொறியாளர்கள் அதிகளவில் இந்த சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.
இந்த சிகிச்சை முறை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றது. முதல் கட்டத்தில், எலும்புத் திசுக்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. எலும்பின் முனைகளுக்கு இடையே உள்ள இடைவெளி திறக்கப்படுவதால், தேவையான எலும்பு நீளம் உருவாகும் வரை புதிய திசுக்கள் உருவாக்கப்படுகிறது. இந்த கட்டத்தில், நோயாளிகள் ஊன்றுகோல் உதவியுடன் நடப்பர்.
சிகிச்சையின் இரண்டாம் கட்டத்தில் எலும்பு ஒருங்கிணைந்து குணமாகும். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், எலும்பு முறிவு மருத்துவத்தில், எவ்வாறு எலும்பு இயற்கையாக ஒன்றுசேர்கிறதோ, அதே முறை இங்கு செயற்கையாக கையாளப்படுகிறது.
எளிதாகத் தோன்றினாலும் இந்த செயல்முறை மிகவும் வேதனை நிரம்பியது. நலம்பெற பல மாத காலம் தேவைப்படும் இச்சிகிச்சை முறைக்கு, சிறிய பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால் தீவிர சிக்கல்கள் ஏற்படுவது அரிதானது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். இயற்கை மருத்துவம் தொடங்கி, தற்போது இருக்கும் அறிவியல் மருத்துவம் வரை புதிய கண்டுபிடிப்புகள் உதித்துக் கொண்டேதான் இருக்கின்றன. எல்லா கண்டுபிடிப்புகளும் மருத்துவத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றன. அதில் இந்த மூட்டு நீட்டிப்பு அறுவை சிகிச்சை முறையும் ஒரு சகாப்தம் என்று சொன்னால் அது மிகையாகாது.
– ஐஸ்வர்யா