டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார் முற்றிலும் போலியானது என அம் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதலமைச்சரான மணிஷ் சிசோடியா, அம்மாநில கல்வித்துறை மற்றும் கலால் வரித்துறைக்கு அமைச்சராக உள்ளார். இந்நிலையில் அம்மாநிலத்தில் மது விற்பனை உரிமங்களை விதிகளை மீறி வழங்கி ஊல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு அம்மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா பரிந்துரைத்துள்ளார்.
மணிஷ் சிசோடியா மீதான ஊழல் வழக்கு முற்றிலும் போலியானது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிலித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பாஜக அரசு, யாரை முதலில் சிறைக்கு அனுப்புவது என முடிவு செய்துவிட்டு, அதன் பின்னர்தான் வழக்கையே உருவாக்குவதாக குற்றம்சாட்டினார். மணிஷ் சிசோடியாவை தனக்கு 22 வருடமாக தெரியும் எனக் கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், தான் சந்தித்ததிலேயே மிகவும் நேர்மையான, தேசபக்தி மிகுந்த மனிதர் மணிஷ் சிசோடியா எனத் தெரிவித்தார். டெல்லியில் அரசு பள்ளிகளை நோக்கி வசதி படைத்தவர்கள் குழந்தைகளையும் வரவழைத்தவர் மணிஷ் சிசோடியா எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
சிறையை கண்டு ஆம் ஆத்மி ஒருபோதும் பயப்படவில்லை எனக் கூறிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆங்கிலேயேர்களிடம் மன்னிப்புக்கேட்ட சாவர்க்கரை பின்பற்றுபவர்கள் தாங்கள் அல்ல எனக் கூறினார். தாங்கள் பகத்சிங்கின் மகன்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.







