டெல்லியில் 58 எம்.எல்.ஏக்களுக்களின் ஆதரவுடன் தமது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்தார் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் ”ஆபரேஷன் லோட்டஸ்” முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாகவும் சட்டப்பேரவையில் அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் முறைகேடாக மதுபான உரிமங்களை வழங்கியதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் ஊழல் புகார்களை சுட்டிக்காட்டி டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக ஆம் ஆத்மி கட்சியினர் மத்திய பாஜக அரசு மீது கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதற்காக அக்கட்சி எம்.எல்.ஏக்களிடம் பாஜக குதிரைபேரம் நடத்துவதாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் புகார் தெரிவித்தார். ”ஆபரேசன் லோட்டஸ்” என பெயர் வைத்து ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் பாஜக இறங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பலர் பாஜக வசம் தாவ உள்ளதாவும் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மைச்செய்தி: சிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?
இந்நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் யாரும் பாஜக வசம் செல்லவில்லை என்பதை நிரூபிப்பதற்காக டெல்லி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கு கோரினார். அப்போது ஆம் ஆத்மியின் 62 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எஞ்சியுள்ள 4 பேரில் ஒருவர் சபாநாயகர். மற்ற மூன்று பேர் மட்டுமே அவைக்கு வரவில்லை. இதன் மூலம் டெல்லி சட்டப்பேரவையில் தமது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை மீண்டும் கெஜ்ரிவால் நிரூபித்தார்.
பின்னர் சட்டப்பேரவையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் நேர்மையை நிரூபிக்கும் விதமாகவே தாம் அவையில் நம்பிக்கை வாக்கு கோரியதாக தெரித்தார். அவைக்கு வராத 3 ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்களில் இருவர் வெளிநாடுகளில் உள்ளதாகவும், ஒருவர் சிறையில் உள்ளதாகவும் கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் பாஜகவின் முயற்சி மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும் ஆனால் டெல்லியில் எடுபடாது எனக் கூறிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் ”ஆபரேஷன் லோட்டஸ்” தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார். துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பின்னர் விரைவில் சட்டப்பேரவை நடைபெற உள்ள குஜராத்தில் ஆம்ஆத்மியின் வாக்குசதவீதம் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதற்கிடையே ஊழல் சர்ச்சைகள் தம்மை சூழ்ந்துள்ள நிலையில் மக்களிடையே விளம்பரம் தேடிக்கொள்வதற்காக சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கு கோரியதாக பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.







