விலைவாசி விண்ணை முட்டுகிறது, தக்காளி விற்கும் விலைக்கு ஆப்பிள் வாங்கிக் கொள்ளலாம் என்று விலை உயர்வை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காவடிக்காரனூரில் அதிமுக சார்பில் கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அதிமுகவின் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் அவர், “அதிமுக கொண்டு வந்த ஒவ்வொன்று திட்டங்களையும் திமுக அரசு முடக்கி வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கியதே திமுக அரசின் சாதனை. திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு. கட்டுமான பொருட்கள் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது. சிமெண்ட் கம்பி விலை விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களின் வீடு கட்டும் கனவு எட்டாக்கனியாகியுள்ளது.
தக்காளி விற்கும் விலைக்கு ஆப்பிள் வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் இரண்டும் ஒரே விலைதான் விற்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் படும் துயரங்கள் வேதனைகள் பற்றி முதல்வருக்கு கவலை இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.







