இந்தியாவின் 100-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் அனுஜ் ஸ்ரீவத்ரி!

இந்தியாவின் 100-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனுஜ் ஸ்ரீவத்ரி உருவெடுத்துள்ளார்.

செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் என்பது சர்வதேச செஸ் கூட்டமைப்பான FIDE வழங்கும் மிக உயரிய பொதுப் பிரிவு பட்டமாகும். இந்தப் பட்டத்தைப் பெற ஒரு வீரர் 2,500 ரேட்டிங் புள்ளிகளை எட்டுவதுடன், குறைந்தபட்சம் 27 ஆட்டங்களை உள்ளடக்கிய கிராண்ட்மாஸ்டர் நார்ம்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை 1988-ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் பெற்றார். தற்போது இந்தியாவின் 100-வது கிராண்ட்மாஸ்டராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனுஜ் ஸ்ரீவத்ரி உருவெடுத்துள்ளார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்கள் மட்டும் 39 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் அனுஜ் ஸ்ரீவத்ரியின் வெற்றி!

7-வது ஆசியான் பிளஸ் தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் மிசாமிஸ் ஆக்சிடென்டல் (Misamis Occidental) மாகாணத்தில் உள்ள சினகாபன் (Sinacaban) நகரில் நடைபெற்றது. 2004-ம் ஆண்டு பிறந்த அனுஜ் ஸ்ரீவத்ரி, இத்தொடரின் முதல் சுற்றுப் போட்டியிலேயே தோல்வியைச் சந்தித்தார். இருப்பினும், அடுத்தடுத்த சுற்றுகளில் சிறப்பாக விளையாடி, 9 சுற்றுகளின் முடிவில் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். வியட்நாமின் நுயென் டுக் ஹோவா 6.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், பிலிப்பைன்ஸின் நூரி அலெகைன் 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

போட்டியின் கடைசி சுற்றுகளில் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு நீடித்த நிலையில், அனுஜ் ஸ்ரீவத்ரி கடைசி இரண்டு சுற்றுகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். தீபாவளி பண்டிகை நாளில் இந்தச் சாதனையை அவர் படைத்தது கூடுதல் சிறப்பாக அமைந்தது.

1988-ல் தொடங்கிய பயணம்!

இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை 1988-ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் பெற்றார். அன்றிலிருந்து தொடங்கிய இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பயணத்தில், தற்போது 100-வது வீரர் என்ற மைல்கல்லை அனுஜ் ஸ்ரீவத்ரி எட்டியுள்ளார். சமீப மாதங்களிலும் இந்தியாவுக்குப் புதிய கிராண்ட்மாஸ்டர்கள் கிடைத்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் எஸ். அஸ்வத் 98-வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்தார். அதன்பிறகு வி.எஸ். ரத்னவேல் 99-வது கிராண்ட்மாஸ்டரானார். தற்போது அனுஜ் ஸ்ரீவத்ரி 100-வது கிராண்ட்மாஸ்டராகியுள்ளார்.

சிறு வயதிலேயே சர்வதேச மாஸ்டர் பட்டம்!

அனுஜ் ஸ்ரீவத்ரி ஏற்கெனவே சிறந்த இளம் செஸ் வீரராக அறியப்பட்டவர். கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் (IM) பட்டத்தைப் பெற்றார். அப்போது மத்தியப் பிரதேசத்தின் இளம் சர்வதேச மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றதாக செய்திகள் வெளியாகின. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்மாஸ்டர் என்ற அடுத்தகட்ட இலக்கையும் எட்டியுள்ளார்.

இந்திய செஸ் விளையாட்டைப் பொறுத்தவரை 100 கிராண்ட்மாஸ்டர்கள் என்ற மைல்கல் குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில் அடுத்தடுத்து புதிய கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகி வருவது, இந்தியாவில் செஸ் விளையாட்டுக்கான இளம் வீரர்களின் திறன் மற்றும் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அதேபோல், இதுவரை ஒரு கிராண்ட்மாஸ்டரைக் கூட உருவாக்காத மத்தியப் பிரதேசத்திற்கு, அனுஜ் ஸ்ரீவத்ரியின் சாதனை புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.