அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, சைதாப்பேட்டை 9-வது கோர்ட்டில் ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து, குற்றவாளி ஞானசேகரனை எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் வைத்து சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஞானசேகருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். செல்போனில் ஞானசேகரன் பேசிய ஆடியோ ஆதாரங்களை ஆய்வு செய்ய குரல் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஞானசேகரன் குரல் சோதனை செய்ய அனுமதி கேட்ட வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் குற்றவாளி ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. வரும் 6 ஆம் தேதி புழல் சிறையிலிருந்து தடயவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து வர சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.