அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் 69 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கௌரவிக்கவுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா வரும் 29-ம் தேதி…

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் 69 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கௌரவிக்கவுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா
வரும் 29-ம் தேதி காலை 10 மணிக்கு பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கில்
நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பின், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்று, பட்டங்கள், பதக்கங்களை வழங்க உள்ளார்.

பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு முழுவதும் தங்கத்தாலான பதக்கங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த 69 மாணவர்களில் 31 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகளான CEG, ACT, MIT, SAP ஆகியவற்றிலும், எஞ்சிய 38 பேர் இதர பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளனர்.
பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ், சிண்டிகேட்
உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

29-ம் தேதி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
நீண்ட காலத்துக்குப் பின் பிரதமர் பங்கேற்பதால், பல்கலைக்கழகம் மற்றும் அதைச்
சுற்றியுள்ள பகுதிகள், 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர
கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடைபெறுவதாகவும், கொரோனா நெகட்டிவ் என்று முடிவுகள் வருவோர் மட்டுமே பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.