மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அமைதிப்பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திமுக சார்பில், சென்னை வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியின் முன்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அணிவகுத்துச் சென்றனர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பேரணியில் பங்கேற்றனர். அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.







