நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோயிலில் பரிவேட்டை!

களக்காடு அருகே, நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயணசுவாமி கோயிலில், ஆனி திருவிழாவை முன்னிட்டு பரிவேட்டை விழா நடந்தது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த ஆதிநாராயண சுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப் பெற்ற…

களக்காடு அருகே, நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயணசுவாமி
கோயிலில், ஆனி திருவிழாவை முன்னிட்டு பரிவேட்டை விழா
நடந்தது.

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை
வாய்ந்த ஆதிநாராயண சுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப் பெற்ற
இந்த கோயிலில் ஆண்டுதோறும், ஆனி மாதம் தேரோட்டத் திருவிழா 11
நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி திருவிழா கடந்த 30ம்
தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி
திருவீதி உலா வருகிறார். திருவிழாவின் 8ம் நாளான நேற்று இரவு பரிவேட்டை
விழா நடந்தது. இதனால், அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை
அலங்காரமும், விசேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து
இரவில் அய்யா நாராயணசுவாமி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி
பரிவேட்டைக்காக கோயிலில் இருந்து புறப்பட்டார்.

பின்னர்அங்குள்ள பால் கிணற்றின் அருகே, மேளதாளங்கள் முழங்க அய்யா
நாராயணசுவாமி பரிவேட்டையாடினார். இதன் அடையாளமாக அம்பு
எய்யப்பட்டது. தொடர்ந்து அய்யா கோயிலுக்கு எழுந்தருளினார். அதன் பின்
அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் களக்காடு சுற்று வட்டார பகுதிகளை
சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், வருகிற 10ம் தேதி
தேரோட்டம் நடக்கிறது.

கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.