சென்னையை அடுத்த தாம்பரத்தில் மழை நீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் சானிடோரியம் பகுதியை சேர்ந்த விஷ்வா என்ற சிறுவன், ராமகிருஷ்ணபுரம் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை சானிடோரியம் மேம்பாலம் அருகே தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ரயில்வே இடத்தில், 3 நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார்.
அப்போது, அங்கு மழை நீர் தேங்கி நின்ற குழியில் தவறி விழுந்ததில் சிறுவன் விஷ்வா உயிரிழந்தார். தகவலறிந்த தாம்பரம் தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







