அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரை கொடுக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா கண்டறியப்பட்டது. அதன் பின் உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டன. இதில், இந்தியா கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகளை கண்டறிந்தன. மேலும், அமெரிக்காவில் பைசர் என்ற தடுப்பூசியும், ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்தன. பெரும்பாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்த தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தரப்பில், பேக்ஸ்லோவிட் மாத்திரை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை 12 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கோ அல்லது நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கோ கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மாத்திரை கொடுக்கப்படும் தகுதியான குழந்தைகள் குறைந்தபட்சம் 40 கிலோ எடையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







