ஈரோடு அருகே ஆம்புலன்ஸ் வசதி இன்றி கஷ்டப்பட்ட பழங்குடியினர்களுக்காக நகைச்சுவை நடிகர் பாலா ஆம்புலன்ஸ் வழங்கினார்.
காமெடி நடிகர் பாலா, பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்ட காப்பகங்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு செய்து வருகிறார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறந்தாங்கி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் முறையாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை கிராமத்தில் உட்பட்ட குன்றி மலைப்பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலை கிராம மக்கள் பயன்படுத்தும் விதமாக ரூபாய் 10 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சேவையினை நடிகர் பாலா தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார்.
இதுபோன்ற பொதுசேவையில் முழுவதுமாக ஈடுபட்டுள்ள இவர், தற்போது ஈரோடு அருகே உள்ள சோளகர் என்கிற பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கு தான் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார் பாலா. சரியான சாலை வசதிகள் கூட இல்லாத அந்த கிராமத்தில் அடிக்கடி காட்டு விலங்குகள் தாக்கி பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அந்த பழங்குடியின மக்கள் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதை அறிந்த பாலா, தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்.
மேலும் அந்த பகுதி அருகே உள்ள தாமரைக்கரை என்கிற கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பங்கள் விவசாயம் செய்ய போதுமான உபகரணங்கள் இன்றி தவித்து வருவதை அறிந்த பாலா, ரூ.3 லட்சம் செலவில் அந்த விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்து உதவியுள்ளார். சின்னத்திரையில் சம்பாதித்து தொடர்ந்து உதவிகளை செய்துவரும் பாலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.







