மேகதாது விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை அனைத்து கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லி சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சட்டப்பேரவை அனைத்து கட்சி பிரதிநிதிகள் நாளை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும், சந்திக்கும் நேரம் உறுதியான பின்னர், பயணத் திட்டம் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் டெல்லி செல்ல முடிவு செய்யப்பட்டாலும், எதிர்கட்சிகளாக அதிமுக மற்றும் பாஜக அனைத்துக் கட்சிகளோடு இணைந்து டெல்லி செல்வார்களா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








