தமிழ்த் திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். அஜித் குமார் நடிப்பில் கடைசியாக 2025-ஆம் ஆண்டு வெளியான குட் பேட் அக்ளி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், பாக்ஸ் ஆஃபீஸிலும் வசூலைக் குவித்தது.
சிறு வயதில் இருந்தே மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் குமார், அவ்வப்போது கார் மற்றும் பைக் பந்தயங்களில் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து சிறிது விலகி, பெரும்பான்மை நேரங்களில் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்களான Asian Le Mans மற்றும் 24H Series போட்டிகளில் அஜித் பங்கேற்றார். பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்த ஆண்டுக்கான ‘ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது’ அஜித்துக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு ‘கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ (Gladiators – In Pursuit of Challenges) என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் சிறப்பு ட்ரெய்லர் இன்று மாலை 6:40 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ட்ரெய்லருக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
கிளாடியேட்டர்ஸ் ட்ரெய்லர் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியலையும் படக்குழு அறிவித்துள்ளது.






