அதிமுக கலவர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகார் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளீட்ட 200 மேற்பட்டவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல உதவி ஆய்வாளர் காசுபாண்டி கொடுத்த புகாரில் இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
எஞ்சிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யும் பணியை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி மற்றும் வீடியோ ஆதாரங்கள் ஆகியவை அடங்கிய பென் டிரைவ் மற்றும் வழக்கு சம்மந்தமான ஆவணங்களை சென்னை போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதிமுக கலவரம் தொடர்பான 4 வழக்குகளில், 2 வழக்குகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, அதிமுக அலுவலக கலவரத்தின்போது, தலைமை அலுவலகத்தில் நுழைந்து பத்திரங்கள் பரிசு பொருட்கள் உள்ளிட்டவை திருடப்பட்ட புகார் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் வெடித்தது. மோதல் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் என 60 பேருக்கு கலவர வழக்கு தொடர்பாக, காவல் நிலைய விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.








