திருநெல்வேலி பேட்டையில் முன்னாள் அதிமுக பஞ்சயத்து துணை தலைவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பேட்டை அடுத்த மயிலப்பபுரடத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகரான பிச்சை ராஜு (52). இவர் முன்னாள் பேட்டை ரூரல் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தார். இவர் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் நெல்லை மாநகராட்சி 18 ஆவது வார்டு வேட்பாளராகவும் போட்டியிட்டார்.
இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையில் பார் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கமான பணிகளை முடித்துவிட்டு பிச்சைராஜ் பேட்டை எம் ஜி ஆர் நகர் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பேட்டை ரயில் நிலையம் வீரபாகு நகர் வழியாக சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வீரபாகு நகர் ரயில்வே சுரங்கத்தில் நின்றிருந்த மர்ம நபர்கள் பிச்சை ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இதில் படுகாயம் அடைந்த பிச்சைராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிச்சை ராஜை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிச்சை ராஜ் உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் அனிதா விசாரணை நடத்தினர். இதனையடுத்து பேட்டை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.







