பல்வேறு சலசலப்புகளுடன் நிறைவு பெற்றது அதிமுக பொதுக்குழு கூட்டம்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கலந்துகொண்டாலும் கடைசி வரை இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. கூட்டத்தில் அவைத் தலைவரை நிரந்தரமாக்கும் தீர்மானத்தை முன்மொழிய ஓபிஎஸ் வந்தபோது அவருக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.
வரவேற்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற எம்.ஜி.ஆர் பாடலை பாடி பூடகமாக வரவேற்றார். உடனே மேடையில் வந்து மைக்கைப் பிடித்த சி.வி.சண்முகம், தீர்மானம் அனைத்தையும் பொதுக்குழு நிராகரிப்பதாக ஆவேசமாக பேசினார். அதனை கே.பி.முனுசாமி விளக்கிப் பேசினார்.கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் போன்றோர் ஒற்றைத் தலைமை நாயகனே என இபிஎஸ்ஸை புகழந்தனர்.
மேடையில் பேச வந்த இபிஎஸ்ஸுக்கு ஆளுயர மலர் மாலையை அணிவிக்க முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் முயன்றார். அப்போது கடுப்பான இபிஎஸ் மாலையை கழட்டிவிட்டார். பின்னர் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனின் நியமனத்துக்கு செயற்குழு – பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, இரட்டைத் தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு, சங்கடம் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழுவில் இரட்டைத்தலைமையை ரத்து செய்ய வேண்டும். ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்க வேண்டும்அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு என அவைத் தலைவர் அறிவித்தார்.
சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறோம் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் அறிவித்தார். தொடர்ந்து ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் ஆகியோர் வெளியேறினர். அப்போது, ஓபிஎஸ்ஸே வெளியே போ என்று செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். எடப்பாடி பழனிசாமிக்கு கிரீடம், வாள், செங்கோல் பரிசளிக்கப்பட்டது. இவ்வாறாக பல்வேறு சலசலப்புகளுடன் நிறைவடைந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்.







