அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 கூடுதலாக, இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வியாழன்கிழமை மதியம் 1.30 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்ட, ஏர் இந்தியாவின் AI171 பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.

242 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 787 ரக ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே 15 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகரில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விடுதி மருத்துவ மாணவர்கள், மேகானி நகரின் பொதுமக்கள் என 270 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார். மேலும் விமான விழுந்த இடத்தில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் எனவும், விமானம் விழுந்து நொறுங்கிய பிஜே மருத்துவக்கல்லூரியின் விடுதியும் புதிதாக கட்டித் தரப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விபத்தில் பலியானோருக்கு இடைக்கால நிவாரணமாக கூடுதலாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.விபத்தில் பலியானோர்களின் குடும்பத்தினருக்கும், உயிர் பிழைத்தவர்களின் குடும்பத்தினருக்கும் உடனடி தேவைகளுக்காக கூடுதலாக இத்தொகை வழங்கப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.