வேளாண் பட்ஜெட் 2023: விவசாயிகள் வரவேற்பு

மதுரை மல்லி இயக்கம், பலா இயக்கம், முருங்கை இயக்கம், மிளகாய் மண்டலம், என விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்பட வேளாண்மைத்துறை பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்களுக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.…

மதுரை மல்லி இயக்கம், பலா இயக்கம், முருங்கை இயக்கம், மிளகாய் மண்டலம், என விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்பட வேளாண்மைத்துறை பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்களுக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் டை இன்று தாக்கல் செய்தார். அப்போது, விருதுநகர் மாவட்டத்தில் மிளகாய் உற்பத்தியை பெருக்கிடும் வகையில் மண்டலம் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிராமத்தைச் சார்ந்த விவசாயி திருப்பதி என்பவர் பேசுகையில், இங்கு மிளகாய் பயிரப்பட்டு, விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த காய்ந்த மிளகாய் வத்தல்களை விற்பனை செய்து, அதன் மூலம் வருமானததை ஈட்டுவதுதான் எங்களது பிரதான தொழிலாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் எங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சர் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது நிச்சசயம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும், எங்களது விவசாயிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

இதேபோல் முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஹெக்டேர் சாகுபடியை அதிகரிக்க வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய 7 மாவட்டங்களில் ரூ.11 கோடியில் முருங்கை இயக்கம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பை வரவேற்று கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகள் வேளாண் துறை அமைச்சருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த நிதி ஒதுக்கீடு மூலமாக முருங்கையில் ஏற்படும் பூச்சி தொற்றுகள் உள்ளிட்ட புதிய நோய்களை கண்டறிந்து, ஆராய்ச்சிகள் மூலமாக அவற்றை நிவர்த்தி செய்ய ஏதுவாக அமையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.