ஜெயிலர் பட வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கும் காசோலை மற்றும் காரை பரிசாக வழங்கி பாராட்டியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதிமாறன்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெயிலர் படம் அபார வெற்றி பெற்றதையடுத்து நடிகர் ரஜினிக்கு காசோலை ஒன்றை கலாநிதி மாறன் வழங்கினார். இதனைத்தொடர்ந்து சுமார் 1.64 கோடி மதிப்பிலான BMW X7 மாடல் சொகுசு கார் ஒன்றையும் கலாநிதி மாறன் வழங்கினார்.
இதனை தொடர்ந்து, ஜெயிலர் பட இயக்குநர் நெல்சனுக்கும் காசோலை ஒன்றை வழங்கினார். அதைத்தொடர்ந்து தற்போது ஜெயிலரின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில், கலாநிதி மாறன் புத்தம் புதிய போர்ஷே காரின் சாவியையும் வழங்கினார்.
இந்நிலையில் ஜெயிலர் பட இசையமைப்பாளர் அனிருத்துக்கும் காசோலை ஒன்றை வழங்கிய தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அதைத்தொடர்ந்து தற்போது ஜெயிலரின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில், கலாநிதி மாறன் புத்தம் புதிய போர்ஷே காரின் சாவியையும் அனிருத்திற்கு வழங்கினார்.







