இபிஎஸ் வைத்திருக்கும் சஸ்பென்ஸ்…ஜெயக்குமார், தங்கமணிக்கு இந்த பதவிகள் கிடைக்குமா?…

அதிமுகவின் இடைக்காலப்பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு, அக்கட்சியில் அதிரடி நியமனங்களை மேற்கொண்டு அதிமுகவின் புதிய அத்யாயத்தை எழுதத் தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவர் வெளியிட்ட பட்டியலில் சில முக்கிய பெயர்கள் விடுபட்டுள்ள நிலையில்…

அதிமுகவின் இடைக்காலப்பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு, அக்கட்சியில் அதிரடி நியமனங்களை மேற்கொண்டு அதிமுகவின் புதிய அத்யாயத்தை எழுதத் தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவர் வெளியிட்ட பட்டியலில் சில முக்கிய பெயர்கள் விடுபட்டுள்ள நிலையில் ஏற்பட்டிருக்கும் சலசலப்புகள் எப்படி சமாளிக்கப்பட போகிறது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தனது நியமன அதிகாரத்தை பயன்படுத்தி, இரண்டு துணைப்பொதுச் செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர், 11 அமைப்புச் செயலாளர்களை நியமித்து அதிமுகவின் தலைமைக் கழகத்தை கட்டமைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.  இதில்  அதிமுக துணைப்பொதுச் செயலாளர் பதவி, பொதுச் செயலாளர் பதவியை போல் 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின்போது துணைப் பொதுச் செயலாளர் பதவியைப் பற்றிக் குறிப்பிடும் அதிமுக சட்டவிதி 21 முற்றிலும் நீக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டு அந்த பதவிக்குரியவர்கள் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் மாற்றப்பட்டது. கடந்த  11ந்தேதி கூடிய அதிமுக பொதுக் குழுவில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி நீக்கப்பட்டு அதற்கு பதில் மீண்டும் துணைப் பொதுச் செயலாளர் என்கிற நியமனப் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படி அதிரடியாக மீண்டும் உருவாக்கப்பட்ட துணைப் பொதுச்  செயலாளர் பதவிகள் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள இருவரும் ஜெயலலிதா காலத்தில் கட்சியிலும், ஆட்சியிலும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்த ஐவர் குழுவில் இடம்பெற்ற சீனியர்கள். ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடஙகிய காலத்திலிருந்து அவருக்கு உறுதுணையாக இருந்தவரான கே.பி.முனுசாமி,  பின்னர் எடப்பாடி பழனிசாமியின் கரங்களை வலுப்படுத்த குரல் கொடுத்தபோதே அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. முன்பு துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த கே.பி.முனுசாமி தற்போது துணைப் பொதுச்செயலாளராக ஆகியிருக்கிறார்.

அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தொடர்ந்து ஆலய  மணியோசை போல் தங்கள் குரலை எதிரொலித்தவர்கள் முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி. கொங்கு மண்டலத்தில் கட்சியில் அதிக செல்வாக்கு பெற்ற இவர்களுக்கு என்ன  பதவியை வழங்கப்போகிறார் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், எஸ்.பி.வேலுமணிக்கு தான் வகித்த தலைமை நிலையச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை ஒற்றை தலைமையை நோக்கி நகர்த்திய பல அதிரடிகளை கடந்த ஜூன் 23ந்தேதி பொதுக்குழுவில் நிகழ்த்தியவரும், ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளை முன்னின்று மேற்கொண்டவர்களில் ஒருவருமான சி.வி.சண்முகம் கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக ஆக்கப்பட்டுள்ளார். 11 பேர் கொண்ட அமைப்புச் செயலாளர்கள்  பட்டியலில், ஜூலை 11ந்தேதி பொதுக் குழுவில் தீர்மானங்களை வாசித்த இருவரில் ஒருவரான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட கட்சியின் சீனியர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்.

இப்படி எதிர்பார்க்கப்பட்ட பல பெயர்கள் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெற்றாலும்,  சில முக்கிய பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயக்குமார், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், செம்மலை,  ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெறாததற்கு என்ன காரணம்  என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எழுந்த ஒற்றை தலைமையை கோரிக்கையை பகிரங்கமாக வெளியிட்டு பூனைக்கு மணி கட்டுவதுபோல் இந்த பிரச்சனையை பெரும் பேசு பொருளாக்கியவர் ஜெயக்குமார். தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இல்லாத அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் அந்த வாய்ப்பு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கும் தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ள தர்மருக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து கட்சியிலாவது அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நேற்று வெளியான தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில்  கட்சியின் வரவு செலவுகளை சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தபோது அவர் அதிமுக பொருளாளர் ஆகப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டார். மேலும் அந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி நீக்கப்பட்டு, பொதுச் செயலாளர் பதவி கொண்டு வரப்படுவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை வாசித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்கிற அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் விடை கிடைக்கவில்லை.  தலைமைக் கழக நிர்வாகிகள்  பட்டியலில் தென் மாவட்டங்களுக்கு இன்னும்கொஞ்சம் முக்கியத்துவம் அளித்திருக்கலாம் என்கிற கருத்தும் நிலவி வருகிறது. நேற்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பட்டியலில் பெண்கள் பெயர் இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த குறைகளையெல்லாம் போக்கி கட்சியில் சலசலப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்க,  தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி விரிவுபடுத்தலாம் எனக் கூறப்படுகிறது. அதிமுக சட்டவிதி எண் 20 பிரிவு 3 பொதுச் செயலாளருக்கு கொடுத்துள்ள அதிகாரங்கள்படி,  துணைப்பொதுச் செயலாளர்கள் எண்ணிக்கையை இடைக்கால பொதுச் செயலாளர் என்கிற முறையில் எடப்பாடி பழனிசாமியால் அதிகரிக்க முடியும். மேலும் நிர்வாகத்தில் தனக்கு துணையாக ஒரு துணைச் செயலாளரை அவரால் நியமிக்க முடியும். நிர்வாக வசதிக்காக தனது விருப்பத்திற்கு ஏற்ப எத்தனை தலைமை நிலையச் செயலாளர்களையும் நியமித்துக்கொள்ளலாம். இதற்கு முன்பு 19 பேர் வரை அதிமுக அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கட்டிருந்த நிலையில் தற்போது 11 அமைப்புச் செயலாளர்கள் பட்டியல்தான் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது துணைச் செயலாளரை நியமிப்பது மற்றும் கூடுதலாக அமைப்புச் செயலாளர்களை நியமிப்பது போன்ற தனக்குள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி இரண்டாவது கட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியில் சலசலப்புகள் ஏற்படாமல் அவரால் தடுக்க முடியும் என்றும் கருத்துகள் நிலவுகின்றன.

– எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.