எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலங்களில் அதிமுகவின் முழுமையான அடையாளங்களாக அவர்கள் விளங்கினர். அக்கட்சியில் உள்ள அனைத்து பதவிகளும், அதற்கு உரிய அதிகாரங்களும் அந்த இரண்டு தலைவர்களுக்கே சமர்ப்பணம் என்பதுபோல் இருந்தது. கிட்டத்த 44 ஆண்டுகள் நீடித்து வந்த இந்த நிலைமை 2016ம் ஆண்டு ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு மாறியது. அதிமுகவின் சட்டவிதிகள் என்ன சொல்கிறது என அடிக்கடி தேடிப்பார்த்து அலசவேண்டிய சூழல் டிசம்பர் 5, 2016க்கு பின்னர் ஏற்பட்டது. யாருக்கு என்ன பதவி, அதற்கு அதிமுக சட்டவிதியில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் என்ன என ஒவ்வொன்றும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன.
அந்த வகையில் அதிமுகவின் உச்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட பொறுப்பிற்கு வந்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. நீதிமன்ற அனுமதியோடு நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் 3வது அத்யாயத்தின் முதல் ஒற்றைத் தலைமையாக பார்க்கப்படுகிறார். 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி அதிமுகவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த பதவியில் உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் தங்களுக்கே என்கிற உரிமையும், பெருமையும் மீண்டும் அதிமுக தொண்டர்கள் வசமே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இடைக்காலப் பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் எடப்பாடி பழனிசாமி, அடுத்த 4 மாதங்களுக்குள் கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளராக அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாளை அவரது ஆதரவாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இடைக்கால பொதுச் செயலாளராக இருந்தாலும் பொதுச் செயலாளருக்குரிய அனைத்து அதிகாரங்களையும் எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார்.
அதிமுகவின் கிரீடமான பொதுச் செயலாளர் பதவிக்கு என்னனென்ன அதிகாரங்கள் உள்ளன என விரிவாக பார்ப்போம்.
தொண்டர்கள் பலத்தை நம்பி எம்.ஜி.ஆரால் சுயம்புவாக உருவாக்கப்பட்ட கட்சிதான் அதிமுக. லீடர்ஸ் பார் கேடர்ஸ் என்கிற கொள்கையின் அடிப்படையில்தான் அந்த கட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிமுக என்கிற சக்கரத்தை சுழற்றும் அதிகார அச்சாணிதான் பொதுச் செயலாளர் பதவி. இந்த பதவிக்குரிய அதிகாரங்கள் குறித்து அதிமுக சட்ட விதி எண் 20ல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவற்றை காண்போம்
1) அதிமுக சட்டவிதி எண் 20ன் தொடக்கத்திலேயே கட்சியின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளுக்கும் பொதுச் செயலாளர்தான் பொறுப்பு என அழுத்தமாக கூறப்பட்டுள்ளது.
2) பொதுச் செயலாளர் நிர்வாக வசதிக்கேற்ப கட்டியின் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து யாரை வேண்டுமானலும் துணைப் பொதுச் செயலாளர்கள் பதவிக்கும், தலைமை நிலையச் செயலாளர் பதவிக்கும் நியமிக்கலாம். துணைப்பொதுச் செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தீர்மானிக்கும் அதிகாரமும் பொதுச் செயலாளரிடமே உள்ளது.
3) அதிமுக தலைமையில் மற்றொரு அதிகாரமிக்க பதவியான பொருளாளர் பதவியையும் பொதுச் செயலாளரால் நியமிக்கப்படுபவரே அலங்கரிக்க முடியும்.
4) தன்னால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், பொருளாளரை நீக்கும் அதிகாரமும் பொதுச் செயலாளருக்கு உண்டு.
5) கட்சியில ஒருவர் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையில் இறுதி அதிகாரம் எடுக்கும் அதிகாரமும் பொதுச் செயலாளர் வசமே உள்ளது.
6) துணைப்பொதுச் செயலாளர்கள் தவிர்த்து, நிர்வாகத்தில் தனக்கு உதவியாக இருப்பதற்காக துணை செயலாளரையும் அதிமுக பொதுச் செயலாளரால் நியமிக்க முடியும்.
7) கட்சியின் பல்வேறு உட்கட்சி அமைப்புகளில் இணை, துணைச் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரத்தையும் பெற்றுள்ளார் பொதுச் செயலாளர்.
8) கட்சியில் உட்கட்சி தேர்தல் முடிந்து எந்த பிரிவிலாவது பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவதாக தெரிந்தால் அங்கு போதிய எண்ணிக்கையில் பெண்களுக்கான நியமன பதவிகளை உருவாக்கவும் அதிமுக பொதுச் செயலாளர் அதிகாரம் பெற்றுள்ளார்.
8) அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான தேதி மற்றும் அறிவிப்பை பொதுச் செயலாளரே வெளியிடுவார்.
9) அதிமுக பொதுக்குழு மற்றும் செயற் குழுக்களை கூட்டும் அதிகாரமும் பொதுச் செயலாளருக்கு உண்டு.
10) செயற்குழு உறுப்பினர்களை பொதுச் செயலாளரே நியமிக்கலாம்.
11) கட்சியின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பான முடிவுகளை எடுக்கவோ அல்லது வங்கியில் பணம் டெபாசிட் செய்வது, கட்சி செலவுகளுக்காக வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது போன்ற பணிகளை தானே நேரடியாக மேற்கொள்ளவோ அல்லது பொருளாளர் மூலம் மேற்கொள்ளவோ பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு,
12) அவசர சூழல்கள், அரசியல் மாறுதல்களை கருத்தில் கொண்டு கட்சியில் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். யாரையும் கட்சியிலிருந்து நீக்கவும், கட்சியின் எந்த அமைப்பையும் செயல்படாமல் நிறுத்திவைக்கவும் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு. முதலில் இந்த நடவடிக்கைகளை அமல்படுத்திவிட்டு பின்னர் பொதுக் குழுவில் அதற்கான அனுமதியை பெறலாம்.
13) தேர்தல்களின்போது வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் பொதுச் செயலாளரின் கையெழுத்து அவசியம்
அதிமுக பொதுச் செயலாளர் பதவி காலியாக இருக்கும்போது, அந்த பதவிக்கு புதிதாக ஒருவர் நியமிக்கப்படும் வரை ஏற்கனவே இருந்த பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் கட்சியின் செயல்பாட்டை கவனிப்பார்கள் என்று அதிமுக சட்ட விதி எண் 20 பிரிவு 5ல் கூறப்பட்டுள்ளது. பொதுக்குழுவை எப்படி எனது அனுமதியில்லாமல் கூட்டலாம் என்கிற ஓ.பன்னீர்செல்வத்தின் வாதத்தை இந்த விதியை வைத்தே நீதிமன்றத்தில் முறியடித்தது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
நியமன அதிகாரங்கள் பலவற்றை பெற்ற, உச்சபட்ச அதிகாரங்களை கொண்ட பதவியாக பொதுச் செயலாளர் பதவியை கட்டமைத்ததாலோ என்னவோ அந்த பதவிக்குரியவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டியுள்ளார் எம்.ஜி.ஆர். அதிமுகபொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அதிமுக விதி எண் 20 இரண்டாவது பிரிவு அழுத்தமாக சொல்கிறது. மேலும் பொதுக்குழு எந்த விதியை வேண்டுமானாலும் மாற்றலாம் ஆனால் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மாற்ற முடியாது என விதி எண் 43 சொல்கிறது.
இப்படிபட்ட பதவிக்கு யார்யாரெல்லாம் போட்டியிட தகுதியானவர்கள் என கேள்வி எழுவதுண்டு. அதற்கு பதிலாகக கட்சியில் குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும், 5 ஆண்டுகள் தலைமை நிலைய நிர்வாகியாக பணியாற்றியிருக்க வேண்டும் என இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அ றிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பொதுச் செயலாளர் பதவிக்கு பதிலாக அதற்கு இணையான இரட்டை தலைமை உருவாக்கப்பட்டபோது விதி எண் 43 திருத்தப்பட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்தெடுக்கப்படலாம் என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 1ந்தேதி செயற்குழுவில் விதி எண் 43 மீண்டும் திருத்தப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் இணை ஒருஙகிணைப்பாளர்கள் பதவிக்குரியவர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மாற்றப்பட்டது. பின்னர் கூடும் பொதுக் குழுவில் இதற்கு ஒப்புதல் பெற வேண்டும் என்றும் முடிவுவெடுக்கப்பட்டது. ”கட்சியின் தலைமை பதவிக்கான பெயர் மாறுவதால் ஒன்றும் பிரச்சனையில்லை ஆனால் அவர்களை தேர்தெடுக்கப்பதில் அடிப்படை தொண்டனுக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டால் அது கட்சி ஜனநாயகத்தை பாதிக்கும்” என கே.சி.பழனிசாமி வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்தும் இந்த மாற்றம் கொண்டு வர காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் பின்னர் ஜூன் 23ந்தேதி கூடிய பொதுக் குழுவில், செயற்குழுவில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை ஏற்கும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதனை சுட்டிக்காட்டி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாம தரப்பு வாதிட்டது தனிக்கதை.
அதிமுகவில் ஒற்றைதலைமையா, இரட்டை தலைமையா என்கிற சர்ச்சை இடியாப்பச்சிக்கல் போன்று நீடித்துக்கொண்டிருந்த நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம், கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் என்கிற இரண்டு அதிரடி நடவடிக்கைகள் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முயன்றுள்ளது ஜூலை 11ந்தேதி பொதுக்குழு. இதன் மூலம் அதிமுகவின் மூன்றாவது அத்யாயத்தின் ஒற்றை அடையாளம் எடப்பாடி பழனிசாமி என்பது நிலைநாட்டப்படுமா, அல்லது தற்போதும் தாம்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவித்துக்கொள்ளும் ஓ.பன்னீர்செலவத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடிகள் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எஸ்.இலட்சுமணன்







