சூரியனை பற்றி ஆய்வு செய்ய அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல்ரீதியான தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில், சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிக்கரமான சந்திரனில் தரையிறங்கியது. இதையடுத்து, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா திட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், இந்த திட்டத்தின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும்.
அதற்கு முன்னதாக ஆதித்யா எல்-1 விண்கலம் 16 நாட்கள் பூமியைச் சுற்றி வரும் போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்படுகிறது. அந்தவகையில் பூமியின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணி கடந்த 3-ந்தேதி நடந்தது. தொடர்ந்து அடுத்து 2-ம் கட்டமாக கடந்த 4-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் சுற்றுப்பாதை உயர்த்தும் பணி நடந்தது. தொடர்ந்து 3-வது கட்டமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி கடந்த 10-ம் தேதியும், 4- வது முறையாக சுற்றுவட்ட பாதை உயர்த்தும் பணி 15-ந்தேதியும் வெற்றிகரமாக நடந்தது.
இந்நிலையில், அறிவியல் ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல்.1 விண்கலம். ஆதித்யா எல்.1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்டெப்ஸ் கருவியின் சென்சார்கள் பூமியிலிருந்து 50,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதி வெப்ப ஆற்றலை அளவிடத் தொடங்கியது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
6 சென்சார்களை உள்ளடக்கிய ஸ்டெப்ஸ் கருவி வெவ்வேறு திசைகளில் கண்காணிக்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்.1 விண்கலத்தின் அறிவியல் ஆய்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ இந்த முடிவுகளின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.







