‘ஆதித்யா எல்-1’ விண்கலம் புவி சுற்றுப் பாதையிலிருந்து நாளை (செப்.19) விடுவிக்கப்பட்டு சூரியனை நோக்கி பயணிக்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம், ‘பிஎஸ்எல்வி சி-57’ ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்.2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 235 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 19,500 கி.மீ. தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
தொடா்ந்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதாவது, விண்கலம் புவிக்கு அருகே வரும்போது அதிலுள்ள உந்து விசை இயக்கப்பட்டு சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இதுவரை 4 முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 256 கி.மீ தொலைவும், அதிகபட்சம் 1,21,973 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் தற்போது விண்கலம் பயணித்து வருகிறது. இந்த நிலையில், இதற்கு அடுத்தகட்டமாக ஆதித்யா விண்கலம் செப்.19-ஆம் தேதி புவிவட்டப் பாதையில் இருந்து விலக்கப்பட்டு சூரியனை நோக்கி பயணிக்க தொடங்க உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. தொடா்ந்து, 4 மாத கால பயணத்துக்குப் பின்னா் புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 பகுதி அருகே விண்கலம் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.







