இன்று விண்ணில் ஏவப்படும் ஆதித்யா L1 விண்கலத்திற்கான 24 மணி நேரத்திற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இறுதிகட்ட பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரை இறங்கி வெற்றிகரமாக ஆய்வை மேற்கொண்டு வரும் நிலையில், சூரியனை பற்றிய ஆய்வில் இஸ்ரோ களமிறங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.
சுமார் 400 கிலோ எடையுள்ள இந்த விண்கலம், சூரியனின் வெளிப்புற வெப்பச்சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் 127 நாட்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ‘லெக்ரேஞ்சியன் 1’ புள்ளியில் நிலை நிறுத்தப்படும் என்றும், அந்த பகுதியில் இருந்துதான் ஆதித்யா எல்-1 தனது ஆய்வுப்பணியை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா எல்-1-ல் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி கருவிகள், சூரியனை அருகில் இருந்து பார்ப்பது போன்ற பிரமாண்டத்தை காட்டும் என்றும், விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆதித்யா எல்-1-ன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்பதால், அதுவரை இடைவிடாமல் ஆய்வு பணியை மேற்கொள்ளும் என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
ஆதித்யா எல்-1 விண்கலத்திற்கான 24 மணிநேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. சந்திரயான் 3 ல் திட்ட இயக்குநராக வீர முத்துவேல் என்ற தமிழர் பணியாற்றியதைப் போலவே ஆதித்யா L1 விண்கலத்திலும் செங்கோட்டையைச் சார்ந்த தமிழரான நிகர்ஷாஜி திட்ட இயக்குநராக செயல்படுகிறார்.




