ஆதிபுருஷ் பாக்ஸ் ஆபிஸ் 8வது நாள் வசூல் மிகவும் மோசமான நிலையில் படத்தை திரையரங்குகளில் இருந்து அகற்றும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ரவுத் இயக்கும் இப்படத்தில், பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ராமாயணத்தை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ரூ.500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது.
இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் வெளியான ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.140 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் வெளியான முதல் 5 நாட்களில் ரூ.400 கோடி வசூலை பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் 8-வது நாளான நேற்று ஆதிபுருஷ் வெளியான அனைத்து மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக ரூ.3.15 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக்கெட் விலையை குறைத்தும் கூட ரசிகர்களிடம் ஆதிபுருஷ் படம் பார்க்க ரசிகர்கள் வரவில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் நேற்று ஆதிபுருஷ் படத்தை பார்க்க 10 முதல் 11 சதவீதம் டிக்கெட்டுகள் மட்டுமே நிரம்பியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதுகுறித்து மும்பையில் திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “படம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைவரையும், குறிப்பாக எழுத்தாளர் மனோஜ் முன்டாஷிர் சிறையில் அடைக்க வேண்டும். பார்வையாளர்கள் இந்தப் படத்தை நிராகரித்துவிட்டனர். நேற்று, சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த படம் மிக விரைவில் திரையரங்குகளில் இருந்து அகற்றப்படும். படம் வெளியான அனைத்து திரையரங்குகளின் உரிமையாளர்களும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்” என தெரிவித்தார்.







