அதானி குழுமத்திற்கு சாதகமாக மத்திய அரசு செயல்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால், கடந்த இரண்டு வாரங்களாக அதானி குழுமம் தொடர்ந்து மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ள நிலையில், எஸ்.பி.ஐ வங்கியும் கடன் வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அதானிக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், இதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டு வரப்பட எந்தத் திட்டமாக இருந்தாலும், வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டு தான் நிறைவேற்றப்படுகிறது. அதானிக்கு சாதகமாக நாங்கள் செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தான் கபட நாடகம் போடுகின்றன. ஒருபக்கம் போராட்டம் நடத்தி விட்டு, மறுபக்கம் அவர்கள் ஆளும் மாநிலங்களில் அதே நிறுவனம் துறைமுகம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற நிலம் வழங்கி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமாக விவாதம் நடத்தாமல், வெளியே போராட்டம் நடத்தியும், தவறான கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர். நாங்கள் இந்த விவகாரத்தில் எதையும் மூடிமறைக்கவில்லை. உள்ளே வாருங்கள். ஆக்கபூர்வமாக விவாதிக்கலாம். பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்புதான். நாட்டின் பொருளாதார கொள்கை மிகவும் வலுவாகவே இருக்கிறது. இதனால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. “ என்று கூறியுள்ளார்.
-ம.பவித்ரா








