பட்டியலின மக்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனுக்கு வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதுன். அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது இவர் வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் பட்டியலின மக்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலினத்தவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் புகார் அளித்திருந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர்.
ஆஜராகாத மீரா மிதுன் வெளியிட்ட வீடியோவில், “என்னை கைது செய்வது என்பது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில்தான் நடக்கும். பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை. அந்த மக்களில் எனக்கு தொந்தரவு கொடுத்தவர்களையே தவறானவர்கள் என்று சொன்னேன்” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் கேரளாவில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஆண் நண்பருடன் தங்கியிருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார், இன்று சென்னை அழைத்து வந்தனர். அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அவருடைய ஆண் நண்பர் அபிஷேக்கையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்நிலையில், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் குடியிருப்பில் உள்ள 7 வது அமர்வு நீதிபதி கிருஷ்ணன் முன்பு நடிகை மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.








