நடிகர் மயில்சாமியின் திடீர் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வருகிறனர் .
1965 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி, 1984ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தூள், கில்லி, திருவிளையாடல் ஆரம்பம், வீரம், வீட்டுல விஷேசம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். மேடை நாடக நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், பலக்குரல் மன்னனாகவும் இருந்த மயில்சாமி, அரசியல் கட்சியினருக்கு மேடை பேச்சாளராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மயில்சாமி, தீவிர சிவன் பக்தர் ஆவார். இதனால் ஆண்டுதோறும் திருவண்ணாமலை மகா தீபத்தில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருந்த மயில்சாமி, நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.பின்னர் வீடு திரும்பும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இந்த திடீர் மறைவு அரசியல் கட்சியினரிடையே மிகப்பெறிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயில்சாமியின் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் , அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயக்குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போன்றோர் நேரில் சென்று அஞ்சல் செலுத்தியும் வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் படைத்த அவர், தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர்.’காமெடி டைம்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப் பெற்றவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்யக்கூடியவர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவரை தொடர்ந்து புதுச்சேரி மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நகைச்சுவை நடிகர் திரு.மயில்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர்.விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார்.மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதேபோல் ஜார்கண்ட் மாநில ஆளுநராக அண்மையில் பதியேற்றுக்கொண்ட சிபி ராதாகிருஷ்ணன் நடிகர் மயிலசாமியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இவரை தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. தன்னை சுற்றியுள்ள பகுதிகளுக்கு,சமூக எண்ணத்தினால் பல சேவைகளை செய்து,தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடத்தில் நீங்கா இடம் பிடித்த அவரின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி..! என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சரான வைகைச்செல்வனும், நடிகர் மயில்சாமி மறைவிற்கு இரங்கல் பதிவு வெளியிட்டுளளார். அந்த பதிவில்,
நடிகர் மயில்சாமி
மறைந்து விட்டார்…!
நீங்கள் சாப்பிடுவது
சைவ சாப்பாடா..?
அசைவ சாப்பாடா..?
என்று கேட்டால்
எம்.ஜி.ஆர் சாப்பாடு என்பார்…!
நல்ல மனிதர்,
நயத்தகு பண்பாளர்..!
என்று நினைவு கூறுகிறேன்..! என தெரிவித்துள்ளார்.
மேலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளிட்டுள்ள இரங்கல் பதிவில், பிரபல நடிகர் மயில்சாமி அவர்கள் திடீரென உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பலகுரல் கலைஞராக திகழ்ந்ததோடு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தவர். அரசியல் ஆர்வமிக்கவராக இருந்த மயில்சாமி, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.
நலிந்த திரைக்கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் மனதில் இடம் பெற்றவர். இந்தத் துயரமான தருணத்தில் மயில்சாமியின் குடும்பத்தினருக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.
இவர்களை தொடர்ந்து, மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மீது கொண்ட தீவிர பற்றின் காரணமாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சியில் நட்சத்திர பேசக்காளராக பணியாற்றிவர் என்ற அடிப்படையிலும், நல்ல மனம் படைத்த மனிதர், திறமையான கலைஞர் என்ற அடிப்படையிலும் அதிமுக சார்பில் மறைந்த மயில்சாமியின் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகப்பெரிய நல்ல மனம் படைத்த மனிதரை இழந்துவிட்டோம். எங்களோடு கட்சியில் பணியாற்றும் போது சாப்பாட்டிற்கு சிரமப்படுபவர்களை தேடி சென்று உணவு வாங்கி கொடுப்பார். பலரின் பசியை போக்கியிருக்கிறார். அவரின் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாதது என தெரிவித்துள்ளார்.
இவரை தொடர்ந்து திமுக கட்சியின் சார்பில், மறைந்த மயில்சாமியின் உடலுக்கு திரையுலகில் இணைந்து பணியாற்றியவர் என்ற முறையிலும், அமைச்சர் என்ற முறையிலும் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் சேத்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு நல்ல மனம் படைத்த மனிதரை நாம் இழந்துவிட்டோம். ஏன் மீது மிகவும் அன்புடன் இருப்பார். நிறைய அக்கறை எடுத்துக்கொள்வார். பொதுமக்களுக்கு யாருக்கு என்ன உதவி தேவை பட்டாலும் என்னிடம் வந்து தயங்காமல் கேட்டு அனைவருக்கும் உதவிகள் செய்வார். நிச்சயம் அவரின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது என்று உருக்கமாக உதயநிதி கூறினார்.
- பி. ஜேம்ஸ் லிசா