நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மலேசிய நீச்சல் போட்டியில் 5 தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகர் மாதவன் தனது நடிப்பின் தனக்கென மூலம் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். காதல் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் சுதா கொங்கோராவின் இறுதி சுற்று மற்றும் புஷ்கர்-காயத்ரியின் விக்ரம் வேதா படங்களின் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மாதவன் தனது மகனுக்கு விளையாட்டுத் துறை மீது ஆர்வம் உள்ளதால் அதற்காக தொடர்ந்து அவருக்கு ஊக்கமளித்து வந்தார். மாதவனின் மகன் வேதாந்த் சிறுவயது முதல் நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றுவருகிறார். 17 வயதான அவர் தற்போது இந்தியாவின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் விளையாட்டு போட்டியில் பங்கேற்று வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். மாதவன் மகன் வேதாந்த் மகாராஷ்டிரா அணிக்காக நீச்சல் போட்டியில் பங்கெடுத்து 5 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார்.
இந்த நிலையில் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் வேதாந்த் இந்தியாவிற்காக 5 தங்கங்களை (50, 100, 200, 400 & 1500 மீ) பெற்றுள்ளார் என நடிகர் மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் “ அவரை ஊக்கமளித்து நல்ல நிலைக்கு ஆளாக்கிய உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.!” என தெரிவித்துள்ளார்.







