தமிழில் ஜோராக வலம் வந்த அஜித் – சிறுத்தை சிவா, அட்லி-விஜய் வெற்றி காம்போ போலல்லாமல் நிஜமாகவே பல தரமான கமர்ஷியல் வெற்றி படங்களை கொடுத்த காம்போ என்றால் அது சுகுமார் – அல்லு அர்ஜூன் கூட்டணி தான். இயக்குநர் சுகுமாரின் முதல் படமும் அல்லு அர்ஜூன் – சுகுமார் கூட்டணியில் வந்த முதல் படமுமான ஆர்யாவே அதிரிபுதிரி வெற்றிப்படம். இதே படம் தமிழில் தனுஷ் நடிப்பில் ‘குட்டி’ என ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து ஆர்யா-2 படமும் வெளியாகி அதுவும் மாபெரும் வெற்றி பெற்று அல்லு அர்ஜூனை தெலுங்கு சினிமாவின் வசூல் இளவரசனாக வளர்த்தெடுத்தது. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சுகுமாரும்- அல்லுவும் சேர்ந்து கொளுத்தி எடுத்த படம் தான் புஷ்பா. கே.ஜி.எஃப் தங்க சுரங்கத்தையும் அங்கு நடந்த தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டல்களையும் மையமாக வைத்து புணையப்பட்ட திரைப்படமான கே.ஜி.எஃப் உலகமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது. இதனைத்தொடர்ந்து அதேபோலான பான் இந்தியா படங்களை எடுக்கும் முயற்சியில் இந்தியாவின் பல்வேறு முன்னணி இயக்குநர்களும் நடிகர்களும் இறங்கினர்.
https://twitter.com/DeadPoolXForce0/status/1549429923101585409
தங்கச் சுரங்கத்தை வைத்து எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப் போலவே, செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட புனைவு படம் தான் புஷ்பா. என்னதான் கே.ஜி.எஃப்-ஐ இன்ஸ்பையராக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இயக்குநர் சுகுமாரின் திரைக்கதை மேஜிக்கால் தனக்கென தனித்துவமான கதையுடனும் காட்சியமைப்புடனும் பிரம்மாண்ட வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது புஷ்பா. சமூக வலைதளம் முழுக்க உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினருமே புஷ்பா அல்லு அர்ஜூனின் நடனத்தையும் நளினத்தையும் ஸ்டைலையும் கொண்டு வீடியோ உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர்.
புஷ்பா முதல் பாகத்தின் இடைவேளைக்கு பிறகு பன்வர்சிங் கதாப்பாத்திரம் மூலமாக வந்து ஒட்டு மொத்த ஆடியன்ஸின் கவனத்தையும் அசால்டாக தன் பக்கம் ஈர்த்திருப்பார் ஃபகத் பாசில். புஷ்பாவுக்கும், பன்வர்சிங்கிற்கு நடுவே தொடங்கும் யுத்தத்துடன் முதல் பாகம் முடிந்த நிலையில் அடுத்த பாகமான push: the rule அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புஷ்பா-2 வில் முக்கியமானதொரு கதாப்பாத்திரத்தில் நடிக்க இப்படக்குழு விஜய் சேதுபதியை அணுகியதாகவும் கூடிய விரைவில் அது தொடர்பான செய்தி உறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியானது. முதல் பாகத்தில் ஃபகத் பாசில் எண்ட்ரி கொடுத்தது போல இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி வந்து ரகளை செய்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஃபகத் பாசில், ‘இயக்குநர் சுகுமார் என்னிடம் புஷ்பா கதை சொல்லும்போது அப்படம் ஒரு பாகமாக எடுக்கத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. எனக்கும் அல்லு அர்ஜுனுக்கு இடையிலும் நடைபெறும் காவல்நிலைய காட்சிகள் படமாக்கப்படும் போதுதான் இதை இரண்டு பாகங்களாக வெளியிடும் முடிவுக்கு வந்தோம். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் என்னை சந்தித்த சுகுமார் புஷ்பா-3க்கு தயாராக இருங்கள், என்னிடம் அதற்கும் கதை இருக்கிறது என்று கூறினார் ‘ எனும் தகவலை பகிர்ந்துகொண்டார். இதனையடுத்து #Pushpa3 எனும் ஹாஷ்டேக் போட்டு ட்ரெண்ட் பலர் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், புஷ்பா -2ம் பாகமே இன்னும் வராத நிலையில் அதற்குள் புஷ்பா-3 ட்ரெண்டா? எனவும் கலாய்த்து வருகின்றனர்.
https://twitter.com/jaynildave/status/1549645872090456064
இருப்பினும், ஃபகத் பாசில் கூறியது போல அடுத்த பாகம் எடுக்கப்படுவது உறுதியானால், இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுக்கப்போகும் விஜய் சேதுபதிதான் அந்த மூன்றாம் பாகத்தின் முக்கிய வில்லனாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. பான் இந்தியா படம் போல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு சிறந்த பான் இந்தியா வில்லனாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர் சினிமா வல்லுநர்கள்.







