”சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் இயங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் கீர்த்தனா!

பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் பெற 3 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை காலதாமதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் பெறுவதில் உள்ள காலதாமதத்தை குறைக்கவும், சட்டவிரோத பட்டாசு ஆலைகளை தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பட்டாசு தொழிலாளர்கள் குறித்து நான் பேசுகிறேன். நான் அந்த சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் உள்ளேன். பட்டாசு ஆலைக்கு உரிமம் பெறுவதற்கு பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால் உரிமம் பெற குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை ஆகும் நிலை உள்ளது. பட்டாசு தொழிலாளர்களை வேறு தொழிலுக்கு செல்லுமாறு கூறினால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த தொழில் அவர்களது ரத்தத்தில் கலந்துவிட்டது. எனவே, அவர்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். உரிமம் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக சில இடங்களில் சட்டவிரோதமாக பட்டாசு தொழில் நடைபெறும் சூழல் உருவாகிறது.

உரிமத்தை புதுப்பிப்பதற்கும் ஒரு ஆண்டு வரை ஆகிறது. இதனை சீரமைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பட்டாசு விபத்துகளை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2005 ஆம் ஆண்டிலேயே தமிழக முதல்வர் பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். தற்போது ஆட்சிக்கு வந்த பிறகும் பட்டாசு தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் இயங்கக் கூடாது என்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பட்டாசு தொழிலில் ரசாயனப் பொருட்களுடன் தொழிலாளர்கள் நேரடியாக பணியாற்றுவதால், அவர்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் நவீன இயந்திரங்களை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ”பட்டாசு தயாரிக்கும் இடங்களுக்கு மட்டுமின்றி, பட்டாசு விற்பனை செய்யும் கடைகளுக்கும் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறினார். அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, கடந்த காலத்தில் ஒரு பட்டாசு உரிமம் வாங்குவதற்கு ( குறிப்பிட்ட வார்த்தையை கூறினார் அவை குறிப்பில் நீக்கப்பட்டுள்ளது ) தற்போது 177 பட்டாசு ஆலைகளுக்கு ஒரு ரூபாய் வாங்காமல் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சல் எழுப்பினர். அப்போது அவை முன்னவர், அவர்கள் யாரையும் குறிப்பிடவில்லை என விளக்கம் அளித்தார்.

இதன் பிறகு திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், பட்டாசு ஆலைகள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் இருக்க வேண்டும், ஒரு ஆலையிலிருந்து மற்றொரு ஆலை குறிப்பிட்ட இடைவெளியில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். பல துறைகளிடம் அனுமதி பெற வேண்டியிருப்பதால் உரிமம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், இதனால் சிலர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் நிலை உருவாகிறது என்றும் அவர் தெரிவித்தார். 3 மாத காலத்தில் வேகமாக உரிமம் வழங்கியதாக கூறுகிறீர்கள். எத்தனை அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன? ஆன்லைன் மூலம் மட்டும் ஆய்வு செய்வதால் அனைத்து விஷயங்களையும் சரியாக கண்டறிய முடியாது. நேரடியாக ஆய்வு செய்யும்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. விரைவாக உரிமம் வழங்குவதுடன், எந்த தவறும் நடைபெறாமல் கவனமாக செயல்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ஒரு குறிப்பிட்ட வார்த்தையை எப்போது வேண்டுமானாலும் இடைச்செருகலாக சேர்த்துக்கொண்டே இருக்கிறீர்கள். எப்போதும் அந்த வார்த்தையை பாடிக்கொண்டே இருக்கிறீர்கள். நாங்கள் அவைக்கு வர வேண்டாம் என நினைக்கிறீர்களா? நீங்கள் பேசுவதை நாங்கள் கேட்க வேண்டாமா?எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சபாநாயகர் குறுக்கிட்டு, நல்ல விஷயத்தை கூறியிருக்கிறீர்கள். ஒரு வார்த்தையை தவிர்த்திருக்கலாம். நீங்கள் கூறியதற்கு அவர்களும் பதில் பேசுகிறார்கள் என்றார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஷ் பேசுகையில், பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க காலதாமதம் ஆவதாக உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு துறைகள் இணைந்து ஆய்வு செய்து அனுமதி வழங்குவதால் காலதாமதம் ஏற்படுவதாகவும், வரும் காலங்களில் விரைவாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கணேசன் பேசுகையில், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தடை செய்ததாகவும், அப்போது அதற்காக தங்களை பாராட்டியதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.