“டங்ஸ்டன் விவகாரத்தில் முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து இருந்தால், டங்ஸ்டன் விவகாரத்தை எளிமையாக முடித்திருக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு…

தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து இருந்தால், டங்ஸ்டன் விவகாரத்தை எளிமையாக முடித்திருக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமை ஏலங்களை எடுக்கக்கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தின் வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கூறியதை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. கனிமம் தொடர்பான சட்டங்களை 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

மத்திய அரசு கொண்டுவரவுள்ள இந்த டங்ஸ்டன் நிறுவனத்துக்கு எதிராக, தமிழக அரசு எழுதிய கடிதத்தை இதுவரையில் வெளியிடாதது ஏன்? டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி இதுவரையில் எந்தவிதமான கடிதமும் மத்திய அரசுக்கு வரவில்லை என சுரங்கத் துறை அமைச்சர் எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மக்களின் போராட்டம் பெரிதாக எழுந்த பிறகுதான், மத்திய அரசுக்கு எதிராக கடிதம் எழுதுவது போல் திமுக அரசு செயல்படுகிறது. இரண்டுமுறை பிரதமரை சந்தித்து பேசும்போது, சுரங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் இந்த விவகாரத்தை எளிமையாக முடித்திருக்கலாம். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால், ஒப்பந்தப்புள்ளி கூறிய போதே இவற்றை தடுத்து நிறுத்தி இருக்க முடியும். திமுக அரசு செய்த தவறுகளை மறைக்க பல்வேறு நாடகங்களை சட்டப்பேரவையில் திமுகவினர் அரங்கேற்றினர்.

தமிழக மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அவற்றை அதிமுக அனுமதிக்காது. இதுதான் எங்களின் நிலைப்பாடு” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.