வேலைக்கா வர சொல்ற… 153 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தேசிய விடுமுறை தினமான மே ஒன்றாம் தேதியான நேற்று ஊழியர்களை பணிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக மதுரையில் 153 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு தொழிலாளர் நலன் துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.   உழைப்பாளர்களை…

தேசிய விடுமுறை தினமான மே ஒன்றாம் தேதியான நேற்று ஊழியர்களை பணிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக மதுரையில் 153 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு தொழிலாளர் நலன் துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

 

உழைப்பாளர்களை கவுரவப்படுத்தும் வகையிலும், உழைப்பாளர்களின் மதிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. மேலும் மே ஒன்றாம் தேதி தேசிய விடுமுறை நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

மே ஒன்றாம் தேதி விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல வேண்டியது அவசியமில்லை. இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வரும்படி ஆணையிடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது போன்ற அத்துமீறல்களை தடுக்கும் பொருட்டு மதுரையில் தொழிலாளர் துணை இணை ஆணையர் சுப்ரமணியன் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

 

அவர்கள் மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில நிறுவனங்கள் தேசிய விடுமுறை நாளை பொருட்படுத்தாமல் தனது தொழிலாளர்களை வைத்து பணி செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, விடுமுறை அளிக்காமல் ஊழியர்களை கட்டாயமாக வரவைத்து பணி செய்ய வைத்த 83 கடைகள், 68 உணவகங்கள், 2 மோட்டார் நிறுவனங்கள் என மொத்தம் 153 நிறுவனங்களை அதிகாரிகள் கண்டறிந்தன. அவைகளுக்கு விளக்கம் கேட்டு தொழிலாளர் துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசின் உத்தரவை பின்பற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.