முன்னாள் பிரதமர் தேவகவுடா குறித்து அவதூறாக பேசியதற்காக கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவர் கே.என்.ராஜண்ணா மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் துமாகுரு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில காங்கிரசின் மூத்த தலைவர் கே.என்.ராஜண்ணா, விரைவில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல்தான் தாம் சந்திக்கப்போகும் கடைசி தேர்தல் என்று கூறினார். தற்போதே தனக்கு 72 வயதாகிவிட்டதாக கூறிய அவர், அடுத்த 5 ஆண்டுகள் கழித்து தேர்தல் வரும்போது தனக்கு 77 வயதாகிவிடும் என்றும், அப்போது தனது கை, கால்கள் நடுங்கத் தொடங்கிவிடும் என்றும் தெரிவித்தார்.
அப்போது கூட்டத்திலிருந்து பேசிய ஒருவர், முன்னாள் பிரதமர் தேவகவுடா, 88 வயதிலும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த ராஜண்ணா, தேவ கவுடாவை தற்போது இரண்டு பேர் தூக்கிச் செல்வதாகவும், விரைவில் 4 பேர் தூக்கிச் செல்வார்கள் என்றும் கூறினார். தேவகவுடாவின் முதுமையை கிண்டல் செய்வது போன்ற ராஜண்ணாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அனைத்துக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் ராஜண்ணாவிற்கு கண்டனம் தெரிவித்தனர். ராஜண்ணா சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும் அவரை எச்சரித்தது. தேவகவுடா குறித்த சரச்சை பேச்சுக்காக மன்னிப்புக்கேட்டுகுமாறு ராஜண்ணாவை கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் வலியுறுத்தினார்.
தமது தந்தை குறித்து ராஜண்ணா பேசிய அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்த தேவகவுடா மகனும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி, இந்த பேச்சு ராஜண்ணாவின் ஆணவத்தையும் திமிரையும் காட்டுவதாக கூறினார். தேவகவுடா தமது தந்தை என்பதால் இதனை கூறவில்லை எனத் தெரிவித்த குமாரசாமி, யாருடைய இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டாலும் தாம் அவர்களின் மறைவை நினைத்து கதறி அழுவேன் என்றார். நீங்கள் கடவுள் இல்லை. உங்களுக்கு மேல் ஒருவர் இருக்கிறார் என்றும் தனது ஆதங்கத்தையும் கண்டனத்தையும் குமாரசாமி பதிவு செய்தார்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா குறித்த தமது சர்ச்சை பேச்சுக்கு கே.என். ராஜண்ணா மன்னிப்பு கேட்டுள்ளார். தமது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக கூறிய ராஜண்ணா, எனினும் அந்த பேச்சினால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக தான் மன்னிப்புக்கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.







