விலைவாசி உயர்வை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.சுஷில் குப்தா, இஞ்சி மற்றும் தக்காளி மாலை அணிந்து, நாடாளுமன்றம் சென்றார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி வாரம் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் இன்று இரண்டாவது நாளாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.சுஷில் குப்தா, இஞ்சி மற்றும் தக்காளி மாலை அணிந்து, நாடாளுமன்றத்திற்கு சென்ற நிகழ்வு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமீபகாலமாக தக்காளியின் விலை என்பது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. தக்காளி மட்டுமின்றி இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட மற்ற காய்களின் விலையும் உயர்ந்து வருகின்றன.
இதனால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சுஷில் குப்தா, இஞ்சி மற்றும் தக்காளி மாலை அணிவித்து, இன்று சென்றார். அப்போது அவருக்கு அருகில் இருந்த உறுப்பினருக்கு பேச வாய்ப்பு கிடைத்து அவர் எழுந்து பேசு ஆரம்பித்ததும், சுஷில் குப்தா தான் அணிந்து வந்த இஞ்சி மற்றும் தக்காளி மாலையை எடுத்து அவருக்கு அருகில் கேமரா முன் காண்பித்தார். பின்னர், மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தங்கரும் எம்பியின் இந்த அணுகுமுறைக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
https://twitter.com/SanjayAzadSln/status/1689168354379259904?s=20
இது குறித்து, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தக்காளி மற்றும் இஞ்சி மாலை அணிந்து அமர்ந்திருந்த படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இதேபோல் நேற்று, “மிகவும் விலையுயர்ந்த தக்காளி…” என்று சுஷில் குப்தா தனது ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவில் தக்காளி வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் மக்களை காட்டினார். “நாடாளுமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கூட தக்காளி வாங்க நீண்டவரிசை உள்ளது. கடந்த பல நாட்களாக நாடாளுமன்றத்தில் மோடி ஜியை தேடிக் கொண்டிருந்தோம், ஆனால் அவர் எங்கும் காணவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மாநிலங்களவைக்கு தக்காளி மற்றும் இஞ்சி மாலை அணிந்தது வந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுசில் குப்தா பணவீக்கத்தால் நாடு முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நிர்வாகத்தில் மட்டுமே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தக்காளி கிலோ 250 ரூபாய்க்கும், இஞ்சி 350 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. எல்லாவற்றின் விலையாலும் நாடு முழுவதும் மக்கள் கவலையில் உள்ளனர். நாடு முழுவதும் வகுப்புவாத கலவரங்கள் நடக்கின்றன. மத்திய அரசாங்கம் மணிப்பூரைப் பற்றியோ, பணவீக்கம் பற்றியோ விவாதிக்கவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கவே இன்று நான் இந்த மாலையை அணிந்து வந்துள்ளேன் என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா





