சபரிமலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆடி மாத நிறைபுத்தரி பூஜை நடைபெற உள்ள நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும் வேண்டி நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைக்காக அச்சன்கோவிலில் இருந்தும், கொல்லங்கோடு பகுதியில் இருந்தும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்திருந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜைக்காக ஆகஸ்ட் 9-ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு, கனமழை காரணமாக முதல் முறையாக கடந்த ஆண்டு நிறை புத்தரிசிக்குப் பக்தர்கள் செல்ல திருவிதாங்கூர் தேவஸ்தானம் தடை விதித்தது. ஆனால், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கையும் மீறி 3 பக்தர்கள் நெற்கதிர்களோடு நீந்தி குறித்த நேரத்தில் சபரிமலை தந்திரி பங்கேற்காமலேயே அன்றைய மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் தலைமையில் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.







