அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு அரசு முறைப் பயணமாக இன்று (அக். 20) இந்தியா வந்தடைந்தார். மும்பை விமான நிலையம் வந்தடைந்த அவரையும் அவரது மனைவி ஜெனட் ரூபியோவையும் இந்தியாவின் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் இந்திய அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினார்.
வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்!
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிய மார்கோ ரூபியோ, வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்க வெளியுறவுத்துறை நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்வதில்லை என்று தெரிவித்தார். இருப்பினும், இந்த விவகாரத்தில் தங்களுக்குப் பெரும் அக்கறை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் மிக நெருக்கமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இறுதி செய்வதற்கு இன்னும் சில அம்சங்கள் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் கூறினார். அவை விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாகவும், விரைவில் நல்ல செய்தியை அறிவித்து, அதன்பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வெனிசுலா எண்ணெய் உற்பத்தியில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை!
இந்தியாவின் எரிசக்தித் தேவைகள் மற்றும் எண்ணெய் கொள்முதல் குறித்துப் பேசிய ரூபியோ, பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்கும் நடவடிக்கைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரிவித்தார். எண்ணெய் கொள்முதலைப் பல்வகைப்படுத்துவது புத்திசாலித்தனமான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்கத் தரப்பு விவாதிக்க உள்ளதாகக் கூறினார்.
உலகின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிவித்த அவர், இந்தியா எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் வலுவான திறனைக் கொண்டுள்ளதாகவும், கனரக கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாகவும் கூறினார். வெனிசுலாவில் இருந்து எண்ணெய் விநியோகம் அதிகரிக்கும்போது, இந்தியா அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், வெனிசுலாவில் இந்தியாவுக்கு ஏற்கெனவே எண்ணெய் உற்பத்தி தொடர்பான உரிமங்கள் இருப்பதால், அங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை வெனிசுலா எண்ணெய் மட்டும் முழுமையாகச் சரிசெய்ய முடியாது என்றாலும், குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் அது உதவக்கூடும் என ரூபியோ தெரிவித்தார். இதுதொடர்பாக இந்தியாவுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், சில தடைகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவுடனான உறவு முக்கியமானது!
இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள பயணம் குறித்துப் பேசிய ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த ஆண்டில் நான்கு முறை அமெரிக்காவுக்குப் பயணம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அமெரிக்காவின் முக்கிய வர்த்தக மற்றும் வணிகக் கூட்டாளியாக இந்தியா இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் சிறந்த ஒத்துழைப்பு நிலவுவதாகவும் கூறினார். இந்தியா, குவாட் (QUAD) அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும், அமெரிக்காவின் வலுவான மூலோபாயக் கூட்டாளியாகவும் இருப்பதாகக் குறிப்பிட்ட ரூபியோ, இரு நாடுகளுக்கும் இடையே மேலும் அதிகமான உயர்மட்டப் பயணங்களும் சந்திப்புகளும் நடைபெற வேண்டும் எனத் தெரிவித்தார்.




