தாளவாடி அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானையை டிராக்டர் வாகனம் மூலம் வனத்திற்குள் விரட்டியடித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டம் தாளவாடி
வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான
வனவிலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை
சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில், தாளவாடி அருகே உள்ள தமிழ்புரம் கிராமத்தை சேர்ந்த நஞ்சப்பா
என்பவரின் விவசாய தோட்டத்திற்குள் நேற்று நள்ளிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை
அங்கு பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.
இதனை கண்ட நஞ்சப்பா, தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். உடன் அருகில் இருந்த மற்ற விவசாயிகளுக்கும் தகவல் தெரிவித்தார். அப்போது அப்பகுதி விவசாயிகள் சத்தம் போட்டு ஒலி எழுப்பினர். ஆனால், அந்த ஒற்றை காட்டு யானை அங்கும் இங்கும் உலாவி கொண்டு விவசாயிகளை தாக்க முயன்றது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் டிராக்டர் வாகனம் மூலம் அந்த ஒற்றை காட்டு யானையை நீண்ட நேரம் போராடி வனத்திற்குள் விரட்டியடித்தனர்.







