தமிழ் திரை இசைக்கலையை உலகம் முழுவதும் கொண்டாட வைத்தவர்களுள் முக்கியமானவர் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை உச்சம் தொட்டு பல ‘சிக்ஸர்’ அடித்திருந்தாலும் தாய் தமிழ் மக்களையும் , மொழியையும் அவர் போற்றிப் பாடாத இடங்களே இல்லை எனலாம். ரோஜா படத்திற்கான தேசிய விருது தொடங்கி, ஹாலிவுட்டின் ஆஸ்கர் விருது வரை தமிழ் மொழியில் முழங்கி, அதன் பெருமையை உலகெங்கும் பறைசாற்றி இருக்கிறார். விழா மேடைகளில் தமிழ் மொழியை கொண்டாடும் அதே வேளையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டாலோ அல்லது தவிர்க்கப்பட்டாலோ ‘பீஸ்ட்’ மோடுக்கு மாறிவிடுவார். உடனே தன்னுடைய வார்த்தைகளை துப்பாக்கியாக்கி அதில் நையாண்டி எனும் புல்லட்டை‘லோட்’ செய்து சரமாரியாக சம்பவம் செய்வதே ‘ரஹ்மானின் ஸ்டைல்’. அதுவே ரஹ்மானின் ‘தக் லைஃப்(thug life)’ என்றழைக்கப்படுகிறது. அப்படி ரகுமான் செய்த சில சம்பவங்களை பார்க்கலாம்..
2012-ம் ஆண்டுக்கான IIFA எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. இது சர்வதேச அளவில் நடைபெறும் இந்திய படங்களுக்கான விருது வழங்கும் விழாவாகும். இந்தியாவின் எல்லா மொழிகளை சேர்ந்த படங்களுக்கும் நடிகர்களும் விருது கொடுக்கப்படும் இந்நிகழ்ச்சியில், குறைந்தபட்சம் அனைவருக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்திலேயே தொகுத்து வழங்கப்பட்டிருக்க வேண்டும் . ஆனால் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இந்தி மட்டுமே மேடையை அலங்கரித்திருந்தது. இந்நிலையில் சிறந்த நடிகருக்கான விருதை அறிவிப்பதற்காக ஏ.ஆர். ரஹ்மான் அழைக்கப்பட்டார். அவ்வளவு நேரம் ‘வெப்பனை லோட்’ செய்துகொண்டிருந்த ரகுமான் மேடை ஏறி மைக்கை பிடித்து, ‘இந்த IIFA சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது’ என்று செந்தமிழில் அறிவித்தார். தொகுப்பாளர்களும் விருந்தினர்களும் அதிர்ந்து போக அரங்கம் ஆர்ப்பரித்தது. ரன்பீர் விருதை வாங்கியதைக்கூட பாலிவுட் மறந்திருக்கக்கூடும் ஆனால் ரகுமான் செய்த ‘thug life’-ஐ அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
அதேபோல் 2014-ஆம் ஆண்டு ‘ரானக்’ எனும் ரஹ்மானின் இசை ஆல்பம் வெளியீட்டு விழாவுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். அப்போது பேசிய கான் ‘ரகுமான் ஒரு சுமாரான இசையமைப்பாளர்தான் தான்’ என கிண்டலடித்ததோடு, ‘ஆஸ்கர் விருது வாங்கியவர் என்னுடைய படத்துக்கு எப்போது இசையமைக்க போகிறார்?’ எனவும் சீண்டினார். பேசி முடித்தவுடன் ‘ஹாய் ஐம் முன்னா’ என்ற தொனியில் சல்மான் கான் கையை கொடுக்க, ‘ இருந்துட்டு போங்க’ என்று விவேக் பாணியில் முதல் அஸ்திரத்தை தொடுத்தார் ரகுமான். பின்பு, பத்திகையாளர்களும் அதே கேள்வியை முன்வைத்த போது, ‘சல்மான் படத்துக்கு மியூசிக் போடனும்னா, எனக்கு புடிச்ச மாதிரி அவர படம் பண்ண சொல்லுங்க’என்று ஒரே போடாக போட்டார் ரஹ்மான்.
இதேபோல் ரகுமான் நிகழ்த்திய இன்னொரு திருவிளையாடலும் உண்டு; ஏ.ஆர். ரகுமான் முதன்முதலில் கதை எழுதி இசையமைத்த 99 படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. சுமூகமாக நடந்துகொண்டிருந்த விழாவில் அங்கிருந்த தொகுப்பாளர் திடீரென இந்தியில் பேசத்தொடங்க, அவரை சடாரென திரும்பி பார்த்து , ‘இந்தி..!’எனக்கூறி ஜெர்க் கொடுத்த ரஹ்மான், மேடையை விட்டு தெறித்து இறங்கினார். மேலும். ‘முதலயே நான் கேட்டேன் தமிழ் தெரியுமான்னு’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார். பின்பு, திருவிளையாடல் படத்தில், ‘யாம் செய்த திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று’ என சிவபெருமான் பேசும் வசனம் போல், ‘நான் சும்மா தமாஷ் பண்னேன்’ என்று thug life செய்தார் ரகுமான்.
இப்படி மேடைகளில் பல்வேறு சம்பவங்கள் செய்துகொண்டிருந்தவர் திடீரென ட்விட்டரில் தன்னுடைய நையாண்டி தோட்டக்களை நிரப்பத்தொடங்கினார். 2019ஆம் ஆண்டும் மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையினை அறிமுகப்படுத்தியது. அதன்படி, இந்தி கற்காத பிற மாநிலங்களில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு தமிழகம் உட்பட பல தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தன. இந்நில்லையில் ரகுமானின் ட்வீட் ஒன்று சோசியல் மீடியாவை அலங்கரித்தது. தமிழ் பஞ்சாபிலும் பரவுகிறது என்றுகூறி, பஞ்சாபி ஒருவர் தமிழ் பாடல் பாடும் வீடியோவை ரகுமான் ஷேர் செய்திருந்தார். ஒரு வேளை மத்திய அரசின் மும்மொழி கல்விக்கொள்கையை சீண்டி பார்க்கிறாரோ என்று யோசித்த சிலர், பிறகு “ச்சே சே அப்படியெல்லாம் இருக்காது” என நினைத்துக்கொண்டே நகர்ந்தனர்
https://twitter.com/arrahman/status/1135056979456479232
இந்நிலையில் மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயம் என்ற முடிவு மாற்றியமைக்கப்பட்டது. இதுகுறித்து சூடான ஒரு ட்வீட்டை பூ போட்ட எமோஜியோடு தட்டிவிட்டார் ரகுமான். அதில், ‘அழகிய தீர்வு’ தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல…திருத்தப்பட்டது வரைவு!’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கூடவே தேசியக்கொடி எமோஜியும் கூடவே ஒரு ரோசாப்பூ எமோஜியையும் வைக்கப்பட்டிருந்தது. முந்தைய ட்வீட்டையும் இதையும் ‘கனெக்ட்’ செய்த இணைய வாசிகள், ‘ஒரு வேள அப்படித்தான் இருக்குமோ’ எனவும் நினைக்கத்தொடங்கினர். இன்னொரு பக்கம் ரகுமானின் இந்த ட்வீட்டுக்கு மும்மொழி கொள்கை ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்வினையாற்ற தொடங்கினர்.
அந்த சமயத்தில்தான் அடுத்த நாளே சுடச்சுட இன்னொரு ட்வீட்டும் ரகுமானின் ட்விட்டர் பக்கதில் போடப்பட்டது.அதில், AUTONOMOUS( தன்னாட்சி ) எனப்படும் வார்த்தைக்கு அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் அகராதியின் விளக்கத்தை பகிர்ந்திருந்தார் ரகுமான். அதன்படி, ‘Autonomous’ என்பதற்கு தன்னாட்சி நிறுவனம், நாடு அல்லது பகுதியானது தன்னிச்சையாக நிர்வகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது எனும் பொருளாகும். இந்த ட்வீட்டுக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று நாம் நினைக்க விரும்பினாலும், அவர் மத்திய அரசுக்குத்தான் மாநில சுயாட்சி குறித்து பாடம் எடுத்துள்ளார் என்றே அரசியல் விமர்சகர்கள் மற்றும் மீம் கிரியேட்டர்களால் ‘டீக்கோட்’ செய்யப்பட்டது. ரகுமானின் இந்த ட்விட்டர் சாகசங்கள் அந்த வாரம் முழுவதும் பேசு பொருளானது.
இந்நிலையில் சமீத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம்வந்துவிட்டது எனவும், இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இந்தியாவில் தேசிய மொழி என்பது இல்லையென்றாலும் இந்திதான் அதிகாரபூர்வ மொழியாகும் என்று குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் ஆளுமைகளும் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.
https://twitter.com/arrahman/status/1512484839056097281
இந்த சூழலில் தான் தன்னுடைய மற்றுமொரு சாகசத்தை கச்சிதமாக அரங்கேற்றியுள்ள இசைப்புயல், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ் தாயின்
‘தமிழணங்கு’ஓவியத்தை போஸ்டராக பதிவிட்டுள்ளார். அதில் தமிழ்களின் ஆதி நிறமான கருப்பு நிற உருவத்திலான தமிழ் தாய், திருவள்ளுவரைப் போல வெள்ளை நிற உடையுடன் காட்சியளிக்கிறார். மேலும் தமிழ் தாய், தலைவிரிக்கோலமாக காலில் சிலம்புடன், கையில் தமிழ் மொழியின் சிகரமான ‘ழ’கரத்தை ஆயுதமாக ஏந்தி தனக்கான நீதி கேட்டு தாண்டவமாடுவது போலவும் அமைந்துள்ளது. மேலும் அப்படத்திற்கு கீழே, ‘இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’என்ற பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ் முழக்கமும் இடம்பெற்றுள்ளது.
மொழிக்கொள்கை தொடர்பாக அமித்ஷாவின் பேச்சும், ரகுமானின் ட்வீட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மீண்டும் மீண்டும் நாம் நினைக்க விரும்பினாலும், அரசியல் விமர்சகர்களும், மொழி ஆர்வலர்களும், மீம் கிரியேட்டர்களும்,‘இசைப்புயலே! இதுவும் உம் திருவிளையாடல்தானா.!! என போகிற போக்கில் போட்டு செல்கின்றனர்.சுபம்!










