தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கும், அஜித் பவாருக்கும் இடையே அதிகார போர் நடைபெறும் நிலையில், அதுகுறித்து இன்றைய சொல் தெரிந்து சொல் பகுதியில் விரிவாக பார்க்கலாம்…
நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் மகராஷ்டிரா அரசியல், தேசிய அளவில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.
மகாராஷ்ராவின் பிரதான கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது இரண்டாக பிளவுப்பட்டுள்ளது .. வேறொருவரின் குடும்பத்தில் பிறந்தது என் தவறா ? நான் என்ன தவறு செய்தேன்? என அஜித் பவார் கேட்கும் கேள்வி, மீண்டும் வாரிசு அரசியல் பிரச்சனைக்கு கமா போட்டுள்ளது எனவே சொல்லலாம் …
தனக்கும் முதல்வராகும் ஆசை இருக்கு என சொல்லும் அஜித் பவாரின் பிண்ணனில் ஒலிந்திருப்பது அங்கீரார பசியா? அல்லது அதிகார பசியா?
நொடிக்கு நொடி அதிரடி திருப்பங்கள் நிகழும் மகராஷ்ட்ரா அரசியல் களத்தில் அடுத்து என்னென்ன நிகழப்போகிறது?அலசுவோம்
பவார்’கள் மோதல்?? என்ன பிரச்சணை NCP-யில்?
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், கடந்த சில தினங்களுக்கு முன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணியில் இணைந்து துணை முதல்வராகியுள்ளார்.
மேலும், தாங்களே உண்மையான தேசிவாத காங்கிரஸ் எனவும் அவர் உரிமை கோரி வருகிறார். இதுதான் தற்போது மகாராஷ்டிரா அரசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
82 வயதான சரத் பவார், மகாராஷ்டிராவின் அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தியவர். மகாராஷ்டிராவில் 4 முறை முதலமைச்சராகவும், பலமுறை மத்திய அமைச்சராகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார் சரத் பவார். 60 வருடத்திற்கு மேலான அவரது அரசியல் வாழ்க்கையானது, இந்திய அரசியலில் ஆழமான தடம் பதித்த பல மைல்கற்களைக் கண்டது.
அஜித் பவாரின் பிண்ணனி என்ன?
சரத்பவாரின் மூத்த சகோதரர் ஆனந்த்ராவ் என்பரின் மகன்தான் இந்த அஜித் பவார். தனது சித்தப்பா சரத் பவாரின் வழியில் துவங்கி, மகாராஷ்டிராவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார் அஜித் பவார்.
முதலில் சர்க்கரை ஆலைகளின் கூட்டுறவு உறுப்பினர், கூட்டுறவு வங்கியின் தலைவர் போன்ற பதவிகளில் இருந்தார். 5 முறை துணை முதல்வராக இருந்த அஜித் பவார், கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கும் மேலாக ஒரே தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் இருந்து வருகிறார்.
கானல் நீராகி போன சி.எம் போஸ்ட்!
ஒருகட்டத்தில் என்சிபியின் அடுத்த தலைவர் என தொண்டர்கள் மத்தியில் பிரபலமாகினார் அஜித் பவார். தன்னை எப்போதும் சரத் பவாரின் அரசியல் வாரிசு என நினைத்து செயல்பட்டு வந்த அஜித் பவாருக்கு, 2009ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவின் அரசியல் வருகைதான் திடீர் ட்விஸ்டை தந்தது..
இது முதல்முறை அல்ல:
அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து இப்படி செல்வது என்பது இது முதல்முறையல்ல.. இதற்கு முன் கடந்த 2019-ம் ஆண்டு, மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் சரத் பவாருக்கும், அஜித் பவாருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் சிவசேனா, பா.ஜ.க-வுடன் முதல்வர் பதவிக்காக மோதிக்கொண்டிருந்தது. அந்த சமையம் பா.ஜ.க-வுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று அஜித் பவார் விரும்பினார். ஆனால், சரத் பவார் அதை ஏற்கவில்லை.
இதனால் 2019-ம் ஆண்டு, தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர். ஆனாலும் அது சில நாள்களே நீடித்த நிலையில், மீண்டும் தேசியவாத காங்கிரஸ்-க்கே திரும்பினார்.
அதன்பிறகு அஜித் பவாரையும், அவருடைய மகன் பார்த் பவாரையும் சரத் பவார் ஒரேடியாக ஓரங்கட்ட ஆரம்பித்தார் எனவும், இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத அஜித் பவார் கட்சியைக் கைப்பற்றுவதற்கான வேலையில் இறங்கியதாக என கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலே தற்போது கட்சியை உடைத்து 2வது முறையாக சரத் பவாரை எதிர்த்துக்கொண்டு பா.ஜ.க-வுடன் அஜித் பவார் ஆட்சியில் இணைந்திருக்கிறார்.
என்ன சொன்னார் அஜித் பவார்?
இந்த நிலையில், அஜித் பவார் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவர் பேசிய சில விஷயங்கள் தற்போது வெளியாகி விவாதப் பொருளாக மாறியுள்ளன. தான் 5 முறை துணை முதல்வராக இருந்துவிட்டதாகவும், தனக்கும் முதல்வராக வேண்டும் என்கிற விருப்பம் இருப்பதாக அஜித் பவாரின் பேச்சு என்சிபி தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல, மகாராஷ்ட்ரா அரசியலிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல்லாம்.
அரசியலில் பலரும் 75 வயதில் ஓய்வு பெற்று விடுகின்றனர். ஆனால், 83 வயதாகியும் ஏன் சரத் பவார் ஓய்வை விரும்பவில்லை. இளைய தலைமுறையினருக்கு வழிவிடுங்கள் இல்லை நாங்கள் சொல்வது சரியென்றால் ஊக்குவிக்கவுங்கள், தவறென்றால் வழிநடத்தவும் என கூறி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்? கட்சி பெயர், சின்னம் யாருக்கு?
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 53 பேரில் 40 பேருக்கும் மேற்பட்டோர் தன்னிடம் இருப்பதாக கூறும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், அதன் சின்னத்தையும் உரிமை கோரி வருகிறார்.
சரத் பவார், எந்த குடும்ப அரசியல் மூலம் பதவி என்னும் சிம்மாசனத்தில் அஜித் பவாரை அமரவைத்து, அவரை அழகுப்பார்த்தாரோ, தற்போது அதே குடும்ப அரசியலால் சரத் பவார் சிக்கலையும் எதிர்கொண்டு இருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இந்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வருமா? கட்சி மற்றும் சின்னம் யார் கைக்கு செல்லும்? அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் மூலம் தெரியவரும்.
– வசந்தி






