வானில் திடீரென மாயமான விமானம்… கேள்விக்குறியான பயணிகளின் நிலை?

அமெரிக்காவில் வானில் திடீரென மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் உள்ள மேற்கு அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து, உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2.37 மணியளவில் ‘செஸ்னா 208பி கிரான்ட் காராவன்’ எனும் சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட 39 நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது. இதைத் தொடர்ந்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் அலஸ்காவின் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானம் வெள்ளை மலை பகுதியில் விபத்துக்குள்ளானதா? என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் மக்களின் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கடல் பகுதிகளிலும் விமானத்தை தேடி வருகின்றனர். மோசமான வானிலை மற்றும் பனிப்பொழிவு காரணமாக விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

காணாமல் போன விமானத்தில் 9 பயணிகள் மற்றும் 1 விமானி உட்பட 10 பேர் பயணம் செய்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களில் அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 விமான விபத்து சம்பவங்கள் நடந்து 69 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. விமானம் காணாமல் போனதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை, இருப்பினும் மோசமான வானிலையே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.