நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் – நடைமுறைகள் என்னென்ன?

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் பற்றியும், அது குறித்த நடைமுறைகள் குறித்தும் தற்போது பார்க்கலாம்… நாடாளுமன்றத்தில் ஆளும் அரசின் பலத்தை சோதிக்கும் வகையில் அல்லது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா…

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் பற்றியும், அது குறித்த நடைமுறைகள் குறித்தும் தற்போது பார்க்கலாம்…

நாடாளுமன்றத்தில் ஆளும் அரசின் பலத்தை சோதிக்கும் வகையில் அல்லது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது நடைமுறை. மக்களவை உறுப்பினர் யார் வேண்டுமானாலும் இந்த தீர்மானத்தை கொண்டு வரலாம்.

அவை நடைபெறும் நாளில், எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட உறுப்பினரின் கையெழுத்துடன் தீர்மான நோட்டீசை அளிக்க வேண்டும். அந்த தீர்மானத்திற்கு அவையிலுள்ள உறுப்பினர்கள் குறைந்தது 50 பேரின் ஆதரவு வேண்டும்.

அந்த தீர்மானத்தை ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்து சபாநாயகர் முடிவு செய்வார்.தீர்மானம் ஏற்கப்பட்டால், அதன் பிறகு எந்த தேதி மற்றும் நேரத்தில் விவாதிப்பது என முடிவு செய்யப்படும். நோட்டீஸ் கொடுத்து 10 நாட்களுக்குள் தீர்மானம் விவாதத்திற்கு வரும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் உள்ள மக்களவையில் தான் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்கப்படும். தீர்மானத்தை கொண்டு வந்தவர், முதலில் பேச அனுமதிக்கப்படுவார். பின்னர் எதிர்க்கட்சியினர் ஒவ்வொருவராக பேச அனுமதிக்கப்பட்டு, அரசு தரப்பு விரிவாக பதிலளிக்கும்.

மக்களவையில் உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பை சபாநாயகர் முறைப்படி அறிவிப்பார்.அவையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

அப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்று, அரசு வெற்றி பெற்றால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆட்சி தொடரும்.

முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலம் தொடங்கி தற்போது வரை 27 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் மட்டும் 15 முறையும் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில் தலா 3 முறையும் வாஜ்பாய் ஆட்சியில் ஒருமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

குறிப்பாக, 1999ல் வாஜ்பாய் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 269 ஓட்டுகளும், ஆதரவாக 270 ஓட்டுக்களும் பதிவானதால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது.

கடந்த 2018ல் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது 12 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இறுதியில், தீர்மானத்திற்கு ஆதரவாக 126 வாக்குகள், எதிராக 325 வாக்குகள் கிடைத்தன. 199 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு வெற்றி பெற்றது.

தற்போது பாஜக ஆட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. வாக்கெடுப்பு நடைபெற்றால் தீர்மானம் தோற்று, அரசு வெற்றி பெறும். ஆனால், மணிப்பூர் வன்முறை குறித்த விரிவான விவாதம் மற்றும் பிரதமரின் விளக்கம் இடம்பெறும் என்பதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.