தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இலங்கையிலிருந்து சிங்களர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த சிங்களர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சபரகமுவா மாநிலத்தின் கேகாலை சேர்ந்த 63 வயது சிங்களரான நான் புத்த மதத்தை பின்பற்றுபவன். இந்த கடினமான சூழலில் அரிசி வழங்கியதற்கு உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி.
இதய நோயாளிகளான நானும், என் மனைவியும் 10 கிலோ அரிசி பையை பெற்றுள்ளோம். நாட்டிலுள்ள சூழலால் அன்றாட வருமானத்தை இழந்துள்ளோம். இதயத்தின் அடி ஆழத்திலிருந்து உங்களுக்கு மிக்க நன்றி.
இலங்கை மக்கள் மீதான இரக்கத்திற்கு மிகுந்த நன்றி. அன்புடன், விஜிதா விக்கிரமசிரி என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக, தமிழக அரசு சார்பில் 15 ஆயிரம் டன் அரிசி, பால் பவுடர் மற்றும் மருந்துப் பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள
மக்களுக்கு உதவும் வகையில் ரூ.80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி
மதிப்பிலான மருந்துப் பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால்
பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








