அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளர் மிலந்த் பாண்டே வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் பணி என தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி மீது டெல்லி உள்ளிட்டபல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் விஷ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளர் மிலந்த் பரண்டே வலியுறுத்தியுள்ளார். சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக அவருக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கெர்ண்டுள்ளார்.







