வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு | மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை…

வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது மதுரை மாவட்டம்…

Alagiri MK

வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது மதுரை மாவட்டம் மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய வட்டாட்சியர் காளிமுத்து மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும்,  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான மு.க.அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் மற்றும் திமுக நிர்வாகிகள் என மொத்தம் 21 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  கடந்த 9-ம் தேதி மு.க.அழகிரி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.  இந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதன்படி, 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் மு.க. அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.