இந்தியாவில் 74% பேருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை: உலக வங்கி அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் உள்ள 74% மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.  மனிதனின் அத்தியாவசிய தேவையே உணவு ,உடை, இருப்பிடம் தான். சராசரியாக ஒரு  நாளைக்கு ஆண்கள் 2600 கலோரிகளும் பெண்கள்…

இந்தியாவில் உள்ள 74% மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. 

மனிதனின் அத்தியாவசிய தேவையே உணவு ,உடை, இருப்பிடம் தான். சராசரியாக ஒரு  நாளைக்கு ஆண்கள் 2600 கலோரிகளும் பெண்கள் 2000 கலோரிகள் உள்ள உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை வழி நடத்த முடியும் என மருத்துவக் குழு பரிந்துரைக்கிறது.

ஒரு சராசரி இந்தியரின் உணவில் பொதுவாக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், மற்றும் முழு தானியங்கள் போதுமான அளவுகளில் இருக்க வேண்டும். மீன், பால் மற்றும் இறைச்சியின் நுகர்வு தேவையான அளவு இருக்கவேண்டும் என உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை 2021 தெரிவித்துள்ளது.

இந்தியா உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், விரைவில் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வேளையில், நாட்டில் உள்ள 74% மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2021-ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் இந்த தகவலை உலக வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆரோக்கியமான உணவுக்கான விலை அதிக அளவில் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, மும்பையில் கடந்த 5 ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை 65% அதிகரித்துள்ளதாகவும், ஆனால், ஊதியம் 28 முதல் 37% வரை மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவையும், சூரியனையும் ஆய்வு செய்ய ஒரு புறம் ராக்கெட் விட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் இந்தியாவில் 74% பேருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.