3 நாட்களில் 54 நோயாளிகள் உயிரிழப்பு : உ.பி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 நாட்களில் 54 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திர பிரதேச மாநிலம் பல்லியா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் உள்ளிட்ட…

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 நாட்களில் 54 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் பல்லியா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 3 நாட்களில் அடுத்தடுத்து 54 பேர் உயிரிழந்தனர். இந்த மருத்துவமனையில் கிட்டத்தட்ட 400 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 54பேர் உயிரிழந்துள்ளனர்

நோயாளிகளின் உயிரிழப்பிற்கு வெப்ப அலையே காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் தவறான மருத்துவ அறிக்கையை வழங்கியது தெரிய வந்தது. வெப்ப அலையால் இவ்வளவு பெரிய உயிரிழப்பு நிகழ வாய்ப்பு இல்லை எனவும், அப்படி நிகழ்ந்திருப்பின் அருகில் உள்ள மருத்துவமனையிலும் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து தலைமை மருத்துவ கண்காணிப்பாளர்  பணியிடமாற்றம் செய்யப்பட்டார். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் “ உபி அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் ஒரேஒரு மாவட்ட தலைமை மருத்துவமனையை கூட இந்த அரசு புதிதாக கட்டவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் ஏழை விவசாயிகள். அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு, மருந்து மற்றும் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.