தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து மத்திய உள்துறை செயலாளரிடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் ஆணையர்கள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவை சந்தித்து பேசினர். அப்போது 5 மாநிலங்களிலும் வாக்குபதிவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ள தேர்தலில் மத்திய ஆயுதப்படை போலீஸாரை பாதுகாப்புக்கு அனுப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் பதற்றம் நிறைந்த தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.







