I.N.D.I.A கூட்டணியின் 3வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
பீகார், பெங்களூரு எதிர்கட்சிக் கூட்டத்தை தொடர்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக்கூட்டம் இன்றும் நாளையும் மும்பையில் நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் 26 கட்சிகள் உள்ள நிலையில், 3வது ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் 2 கட்சிகள் இணைய உள்ளதாக தெரிகிறது.
இன்றைய கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்பட 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் ஆலோசனையின்போது, இந்தியா கூட்டணியின் இலச்சினை வெளியிடப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எதிர்கட்சிகளின் தலைவர்கள் மும்பைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.







